சிப்பாங் நகராட்சி மன்றம் வீடு வளாகத்துக்குள் உள்ள சாமி மேடைகள் எதனையும் உடைக்காது என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
வீட்டு வளாகத்துக்குள் கட்டப்பட்ட சாமி மேடைகளுக்கு ஊராட்சி மன்ற அனுமதி தேவை இல்லை மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதை தொடர்ந்து அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிப்பாங் நகராட்சி மன்றம், பண்டார் பாரு சாலாக் திங்கி குடியிருப்பாளர்கள் சமர்பித்த மகஜர், பல இந்திய அமைப்புக்களின் கருத்துக்கள் ஆகியவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட பின்னர் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“நாங்கள் அந்த விஷயத்தை மேலும் ஆய்வு செய்யத் தயாராக இருக்கிறோம். நாங்கள் இன்று மூன்று விஷயங்களை முடிவு செய்தோம். சிப்பாங் நகராட்சி மன்றம் இனிமேல் எந்த சாமி மேடையையும் உடைக்காது; இரண்டாவதாக, ஊராட்சி மன்ற அனுமதி இன்றி (பண்டார் பாரு சாலாக் திங்கியில்) சாமி மேடை விரிவுபடுத்தப்படக் கூடாது.”
“மூன்றாவதாக, குடும்ப அல்லது தனிநபர் பயன்பாட்டுக்காக சாமி மேடையோ அல்லது வழிபாட்டு இடமோ வீட்டு வளாகத்துக்குள் கட்டப்பட்டால் ஊராட்சி மன்ற அனுமதி தேவை இல்லை,” என காலித் ஷா அலாமில் மாநில ஆட்சி மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
நவம்பர் 20ம் தேதி பண்டார் பாரு சாலாக் திங்கியில் சிப்பாங் நகராட்சி மன்றத்தைச் சேர்ந்த 30 அமலாக்க அதிகாரிகள் இந்துவான உமா தேவியின் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து அங்கு கட்டப்பட்டிருந்த குடும்ப சாமி மேடையை உடைத்தனர்.