தேசிய மொழி பயன்பாடு குறித்து லிம்-க்கு ராயிஸ் பதிலடி

தேசிய மொழியை பினாங்கு மாநில அரசாங்கம் ஒதுக்குவதாக குற்றம் சாட்டியதற்காக தம்மை பொய்யர் எனக் கூறிய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு தகவல், பண்பாடு தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் பதிலடி கொடுத்துள்ளார்.

” நான் உத்துசானைப் போன்று பொய் சொல்வதாக லிம் சொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. தேசிய மொழி என்ற முறையில் மலாய் மொழியில் ஒரு வார்த்தையைக் கூட அன்றிரவு ஹான் சியாங் கல்லூரியின் அறிவிப்பாளர்கள் பயன்படுத்தவில்லை”, என உத்துசான் மலேசியாவுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் ராயிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிகழ்வு தனியார் கல்லூரி ஒன்று ஏற்பாடு செய்தது என்றும் மாநில அரசாங்கம் அல்ல என்றும் லிம் நேற்று விடுத்த அறிக்கையில் ராயிஸுக்கு நினைவுபடுத்தியிருந்தார்.

தேசிய மொழி ஒதுக்கப்பட்ட மாநில அரசாங்க நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடுமாறும் அவர் ராயிஸுக்கு சவால் விடுத்தார்.

“அந்த நிகழ்வை ஹான் சியாங் நடத்திய விதம் குறித்து ராயிஸ் மகிழ்ச்சி அடையாவிட்டால் அவர் ஹான் சியாங்-கிடம் அது குறித்து ஏன் தெரிவிக்கவில்லை? ஹான் சியாங்கிடமிருந்து ஏன் அவர் விளக்கம் கோரக் கூடாது?

என்றாலும் ராயிஸ் அதற்கான பழியை முதலமைச்சர் மீது போட்டார். அந்த விஷயத்தை லிம் கல்லூரியிடம் எழுப்பியிருக்க வேண்டும் என்றார் அவர்.

“தேசிய மொழியை மதிக்குமாறு அந்தக் கல்லூரியில் உள்ள தமது ஆதரவாளர்களுக்கு அறிவுரை கூறியிருக்க வேண்டும்”, என ராயிஸ் சொன்னதாக உத்துசான் குறிப்பிட்டது.

பினாங்கில் எதிர்த்தரப்பு அரசாங்கத்தை அமைத்த பின்னர் தேசிய மொழிக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்று கடந்த திங்கட்கிழமை அமைச்சர் ஏமாற்றம் தெரிவித்திருந்தார்.

அந்த மாநிலத்தில் தாம் கலந்து கொண்ட அதிகாரத்துவ நிகழ்வு ஒன்றில் ஏற்பாட்டாளர்கள் மண்டரினிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே பேசியதிலிருந்து அது தெளிவாகத் தெரிகிறது என ராயிஸ் கூறிக் கொண்டார். ஆனால் அவர் அந்த நிகழ்வைப் பெயர் குறிப்பிடவில்லை.

ஹான் சியாங் தனியார் கல்லூரியை உள்ளூர் சமூகத்தைச் சார்ந்த பிரபலமான தலைவர்கள் 1999ம் ஆண்டு தோற்றுவித்தனர்.