சிலாங்கூர் மாநிலத்தில் நாடாற்றவர்களாக உள்ள மலேசியர்களின் சிவப்பு நிற அடையாள அட்டை விண்ணப்ப பாரங்களின் ஒரு தொகுதியை சிலாங்கூர் மாநில அரசாங்கம் தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தில் சமர்ப்பித்துள்ளது.
புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசிய பதிவுத் துறை தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மாநில அரசுக்கும் தேசியப் பதிவுத் துறை உயர் அதிகாரிகளுக்குமிடையே நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின்போதே இந்த விண்ணப்ப பாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மலாய் இனத்தவர் 54 பேர், இந்தியர் 467 பேர், சீனர் 110 பேர் என கிள்ளான் வட்டாரத்தில் நடாற்றவர்களாக உள்ள சுமார் 631 பேரின் விண்ணப்ப பாரங்களை, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், தேசியப் பதிவுத் துறை துணை இயக்குநர் அபு ஹசன் டகமானிடம் வழங்கினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் நாடாற்றவர்களாக உள்ள மேலும் பலரின் விண்ணப்ப பாரங்கள் விரைவில் சேகரிக்கப்பட்டு தேசியப் பதிவுத் துறையிடம் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறிய சேவியர், வறிய நிலையிலுள்ள நடாற்ற மலேசியர்களின் நிதி சுமையை குறைக்க அடையாள அட்டை விண்ணப்பத்தின்போது, தேசியப் பதிவுத் துறை அறவிடும் ரிம 300-ஐ சிலாங்கூரிலுள்ள நாடற்ற மலேசியர்களுக்காக மாநில அரசாங்கம் அத்தொகையை செலுத்த முன்வந்துள்ளதாக கூறினார்.
நாடற்றவர்களாக உள்ள மலேசியர்களின் பிரச்னை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என தாம் தேசிய பதிவு துறை துணை இயக்குநரிடம் விளக்கி கூறியதாகவும், சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க சிலாங்கூர் மாநில அரசாங்கம் உதவ தயாராக உள்ளதாகவும் தாம் அவரிடம் கூறியதாக சேவியர் ஜெயகுமார் தெரித்தார்.
தேசியப் பதிவுத் துறை துணை இயக்குநர் அபு ஹசன் டகமான், தேசியப் பதிவுத் துறை குடியுரிமை பிரிவு இயக்குநர் ஹஸன் வாஹித் மற்றும் விசாரணைகள் மற்றும் செயலாக்க பிரிவு இயக்குநர் வான் ஜகாரியா வான் அவாங் ஆகியோருடன் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமாரின் செயலாளர் இஸ்மாயில் அப்துல் ரசாக், சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைவர் எல். சேகரன் மற்றும் பாக்கிய நாதன் ஆகியோருடன் சிலாங்கூர் மாநில அரசின் இதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.