பத்துமலை ‘கொண்டோ’ விவகாரத்தில் தமக்கு எதிராக உலு சிலாங்கூர் எம்பி பி கமலநாதன் தொடுத்துள்ள அவதூறு வழக்கை எதிர்த்துப் போராடப் போவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ அறிவித்துள்ளார்.
வழக்குரைஞர்களான கர்பால் சிங், கோபிந்த் சிங் டியோ- இருவரும் டிஏபி தலைவர்கள்-ஆகிய இருவருடன் அந்த விவகாரத்தைப் பற்றி கலந்தாய்வு செய்ததாக பண்டமாரான் சட்ட மன்ற உறுப்பினருமான லியூ கூறினார்.
“கர்பால் அந்த அவதூறு வழக்கை எதிர்க்குமாறு எனக்கு அறிவுரை சொன்னார். நான் அவ்வாறே செய்வேன். என்னைப் பிரதிநிதிப்பதற்கு அவர்களில் ஒருவரை நான் நியமிப்பேன்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பத்துமலை ‘கொண்டோ’ விவகாரத்தில் லியூ தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது ஒரு மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை மஇகா புத்ரா பிரிவுத் தலைவருமான கமலநாதன் சமர்பித்துள்ளதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
கமலநாதன் தமது வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஜோசப் இருதயம் அண்ட் கோ என்னும் வழக்குரைஞர் நிறுவனம் வழியாக வெள்ளிக் கிழமை தாக்கல் செய்தார்.
செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர் அல்ல
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியை அங்கீகரிக்கும் செலாயாங் நகராட்சி மன்ற முடிவில் கமலநாதன் பங்கு கொண்டார் என்ற சாதாரண அர்த்தத்தைக் கொடுக்கும் அவதூறான வார்த்தைகளை லியூ பிரி மலேசியா டுடே இணையத் தளத்திடம் லியூ அக்டோபர் 23ம் தேதி சொன்னார் என உலு சிலாங்கூர் எம்பி கூறிக் கொண்டுள்ளார்.
அதன் வழி தாம் பத்துமலைக் கோயிலுக்கு பாதகமாக அந்தத் திட்டத்தை அங்கீகரிப்பதில் தாம் முறைகேடாக நடந்து கொண்டதாகவும் சுயநலனுடன் செயல்பட்டதாகவும் பொருள்படக் கூடிய வகையில் லியூ கூறியுள்ளார் என்று அந்த மஇகா அரசியல்வாதி கூறிக் கொண்டார்.
ஆனால் 2006ம் ஆண்டு தமது செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர் பதவி நிறைவுக்கு வந்து விட்டதாக அவர் சொன்னார்.
அந்தத் தகவல் வெளியிடப்பட்டதின் மூலம் தமது தோற்றத்துக்கும் மஇகா, பிஎன் ஆகியவற்றுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வரும் தேர்தலில் தாம் எம்பி-யாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டும் வாய்ப்பையும் பாதிக்கக் கூடும் என்றும் கமலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் அந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் விளக்கி விட்டதாகத் தெரிவித்த அவர், அதனை மீட்டுக் கொள்ளுமாறு லியூவைக் கேட்டுக் கொள்ளும்படி தாம் தமது வழக்குரைஞர்களுக்கு பணித்ததாகவும் ஆனால் லியூ எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கத் தவறி விட்டதாகவும் அந்த எம்பி சொன்னார்.