சரவாக்கில் தொகுதிப் பங்கீடு குறித்து எதிர்த்தரப்பு இன்னும் உடன்பாடு காணவில்லை

சரவாக்கில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீடு குறித்து பிகேஆ-டிஏபி-பாஸ் ஆகியவை இரண்டு முறை சந்தித்துப் பேசியுள்ளன. ஆனால் இது வரையில் எந்த இணக்கமும் ஏற்படவில்லை.  இவ்வாறு அந்தக் கட்சிகளின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிஏபி-யும் பிகேஆர்-கட்சியும் தாங்கள் போட்டியிட விரும்பும் இடங்கள் மீது இன்னும் இணக்கம் காணாதது முக்கிய காரணம் என அவை தெரிவித்தன. அத்துடன் சில தொகுதிகளில் அவ்விரு கட்சிகளுமே போட்டியிட விரும்புகின்றன.

டிஏபி-யுடன் ஒரே இடத்தில் போட்டியிட விரும்புவதாக பாஸ் கட்சி இது வரை எதுவும் தெரிக்கவில்லை. என்றாலும் பிகேஆர் கட்சியுடன் அதற்கு சில கோரிக்கைகள் உள்ளன.

எதிர்த்தரப்பு இணக்கம் காணத் தவறியிருப்பதை சரவாக் டிஏபி தலைவர் வோங் ஹோ லெங் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இறுதி முடிவு செய்யும் முன்னர் இன்னும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றார் அவர்.

“இணக்கம் இன்னும் ஏற்படவில்லை, என்றாலும் அது பிரச்னை அல்ல. சில இடங்களில் போட்டியிட ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் விருப்பம் கொண்டுள்ளன. எங்களுக்காக பேச்சு நடத்துவதை நாங்கள் கட்சித் தலைமைத்துவத்திடம் விட்டு விடுவோம்,” என்றார் அவர்.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இட ஒதுக்கீட்டுப் பிரச்னை தீர்க்கப்பட்டு விடும் என்று சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாண்டு  ஏப்ரல் மாதம் மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் போது  இட ஒதுக்கீடு குறித்து நிகழ்ந்த பேச்சுக்களுடன் ஒப்பிடுகையில் இப்போது பிகேஆருக்கும் டிஏபிக்கும் இடையில் விவாதங்கள் எளிதாக இருப்பதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

என்றாலும் அந்த விவகாரம் தீர்க்கப்படுவதற்காக கட்சியின் தேசியத் தலைமைத்துவத்திற்கு அனுப்பப்படுமா என்பது பற்றி கருத்துக் கூற பாரு பியான் மறுத்து விட்டார்.

சரவாக்கில் மொத்தமுள்ள 31 நாடாளுமன்ற இடங்களில் டிஎபி-யும் பிகேஆரும் 12 முதல் 15 இடங்களுக்குக் குறி வைத்திருப்பதாகத் தெரியவருகிறது.

பாஸ் கட்சி மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இரண்டு அல்லது மூன்று இடங்களில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்னாமா