நஜிப்: “வசிப்பிடக் கட்டுப்பாட்டில்” உள்ள 125 பேருக்கு விடுதலை

வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள 125 பேர் மீதான ஆணை உடனடியாக மீட்டுக் கொள்ளப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார்.

அந்தச் சட்டத்தை அகற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் இரண்டாவது வாசிப்புக்கு சமர்பித்த போது அவர் அந்தத் தகவலை வெளியிட்டார்.

அந்தச் சட்டத்தின் கீழ் இன்னும் நிலுவையில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட கைது ஆணைகளும்  உடனடியாக ரத்துச் செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.

“அந்த 1933ம் ஆண்டுச் சட்டத்தை ரத்துச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏனெனில் அந்தச் சட்டம் காலத்திற்கு ஒவ்வாதது, நடப்பு சூழ்நிலைக்கு இனிமேலும் பொருத்தமில்லாதது”, நஜிப் தமது 20 நிமிட உரையில் கூறினார்.

“அகண்ட அலைக்கற்றை, விவேக கைத் தொலைபேசிகள், மின் அஞ்சல், ஸ்கைப், தொலைநகல், கம்பி இல்லாத இணையம் ஆகியவை நிறைந்து விட்ட இந்த கால கட்டத்தில் வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டம் பயனற்றதாகி விட்டது”, என்றார் அவர்.

இதனிடையே வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள 125 பேர்களிடம்  விடுதலை ஆணையை சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் தலைவர்கள் நாளை வழங்குவர் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நாடாளுமன்ற வளாகத்தில் தெரிவித்தார்.

அந்தச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று அந்த விடுதலை ஆணைகளில் கையெழுத்திடப்பட்டதாக அவர் சொன்னார்.