கோலாலம்பூரில் உள்ள துங் ஷின் மருத்துவமனையில் கூடிய பெர்சே 2.0 பேரணிப் பங்கேற்பாளர்களை கலைக்கும் போது போலீஸ் படையின் சீரான செயல் நடமுறைகளை மீறியதாக ஒரே ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரும் அந்தத் தகவலை உறுதிப்படுத்தினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நேரத்தில் உள்-ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
என்றாலும் அந்தச் சம்பவம் அளவுக்கு அதிகமாகப் பெரிதுபடுத்தப்பட்டு விட்டது. தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பேரணியின் போது போலீஸ் மட்டும் நிலைமைக்கு பொறுப்பேற்கவில்லை என ஹிஷாமுடின் மேலும் சொன்னார்.
“ஆறு அல்லது ஏழு ” தவறுகளில் துங் ஷின் மருத்துவமனைச் சம்பவமும் ஒன்று என அவர் கூறினார்.
அந்த மருத்துவமனையின் முக்கிய நுழைவாயிலிலும் பல மாடி கார் நிறுத்துமிடத்திலும் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ், நீரைப் பாய்ச்சியதாக நேற்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சு அறிக்கை கூறியது.
ஜுலை 9ம் தேதி நிகழ்ந்த அந்தப் பேரணியின் போது துங் ஷின் மருத்துவமனை வளாகத்துக்குள் நீர் பாய்ச்சப்பட்டது என்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன என்றும் கூறப்பட்டதை தொடக்கத்தில் போலீஸும் சுகாதார அமைச்சும் மறுத்தன.
ஆனால் பொது மக்களுடைய தீவிரமான அழுத்தத்தைத் தொடர்ந்தும் இணையத்தில் படங்களும் வீடியோக்களும் வெளியானதைத் தொடர்ந்தும் அந்த விவகாரத்தை ஆராய சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் குழு ஒன்றை அமைத்தார்.