“திருடப்பட்ட தீர்ப்பு” பதிப்புரிமை சம்பந்தப்பட்டது

சிங்கப்பூர் நீதிபதியின் தீர்ப்பை திருடியதாக கூறப்படும் மேல்முறையீட்டு நீதிபதி பதிப்புரிமை மீறல் சம்பந்தப்பட்ட வழக்கு தீர்ப்பில் அதனைச் செய்துள்ளார். இது முரண்சுவையானது என்று கூறி வயிறு குலுங்கச் சிரித்தார் கர்பால் சிங்.

 இதில் சம்பந்தப்பட்ட நீதிபதியை விசாரணை மன்றத்தின் முன் நிறுத்தி பதவியிலிருந்து அகற்றக்கோரும் மனு ஒன்றை அவர் நேற்று சுமார் 60 பக்கத்தான் ராக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு மக்களவை தலைவரின் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

“இது சற்று விந்தையானது என்று என்னிடம் கூறப்பட்டது. இந்தப் பெயர்பெற்ற நீதிபதி சிங்கப்பூரின் முன்னாள் நீதிபதி ஜிபி செல்வம் வழங்கிய பதிப்புரிமை சம்பந்தப்பட்ட தீர்ப்பை திருடியுள்ளார்”, என்று கர்பால் சிரித்தவாறு கூறினார்

“இது சிங்கப்பூர் மற்றும் மலேசிய நீதிபதிக்களுக்கிடையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் தலைமை நீதிபதி நமது சிஜேக்கும் (தலைமை நீதிபதி) இவ்விவகாரம் குறித்த புகாரை அனுப்பி இருந்ததாகவும் நான் அறிகிறேன்.”

கர்பால் இதனை மலேசியாகினியிடம் பெடரல் நீதிமன்றத்திற்கு வெளியில் அன்வார் இப்ராகிம் சம்பந்தப்பட்ட வழக்கின் போது கூறினார்.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இது சில மலேசிய நீதிபதிகளிடம் நேர்மை இல்லாதிருப்பதைக் காட்டுகின்றது என்றார்.

இக்குற்றச்சாட்டுக்கு பதில் கூற விருப்பம் தெரிவிக்கின்றவரையில் அந்த மேல்முறையீட்டு நீதிபதியின் பெயர் வெளியிடப்படாது.

மலேசியாகினி அந்த நீதிபதியுடன் தொடர்பு கொள்ள பல தடவைகளில் முயன்றது. அவரது செயலாளரிடமிருந்து கிடைத்த பதில் “அவர் இல்லை” என்பதாகும்.

அந்த நீதிபதி விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை கர்பால் நேற்று மக்களவை தலைவரின் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

அந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்க அவைத் தலைவருக்கு ஏழு நாள் அவகாசம் உண்டு.