-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 28, 2012.
சொந்த வீடுகள் பெற்றிராத ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என பகாங் மாநில முதல்வர் அட்னான் யாக்கோப் அறிக்கை விட்டுள்ளார். (The Star, 23/12/2012 – Page 14)
நல்லது வரவேற்கிறோம். ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதே பல்லவியை பாடிக்கொண்டிருக்கின்றார்களே ஒழிய, இதை செயல்படுத்தும் அறிகுறிகளை காணோம். இவ்விவகாரம் இன்னும் ஏட்டுச் சுரைக்காய் வடிவிலேயே உள்ளது.
ஆம்! தேர்தல் நெருங்கும் வேளைகளில் வீடற்ற ஏழை எளியோரை திருப்திப் படுத்தும் அறிக்கைகளே இவை.
உதாரணத்திற்கு, கேமரன் மலையில் நூற்றுக்கணக்கான ஏழை எளியோர் சொந்த வீடின்றி அவதியுறுகின்றனர். ஏழைகளுக்கான குறைந்த விலை வீடுகள், அரசினாலோ அல்லது தனியார் துறையினாலோ கட்டித் தரப்படுவதில்லை. குறைந்தது நான்கு இலட்சம் வெள்ளி மதிப்புடைய வீடுகளே இங்கே கட்டப்படுகின்றன.
வேறு வழியின்றி வீடில்லாமல் பரிதவிக்கும் ஏழைகள், அரசாங்க புறம்போக்கு நிலங்களில் குடிசை வீடுகளை எழுப்பினால், அரசு வந்து உடைத்துப் போட்டு விடுகிறது. கேமரன் மலையில் வீடில்லாத ஏழைகளின் பாடு பெரும் திண்டாட்டம்.
இதை நன்கறிந்த தேசிய முன்னணி அரசு, தேர்தல் காலங்களில் குறைந்த விலையில் வீடுகளை கட்டித் தருவதாகக் கூறி, ஏழை எளியோரை தன் வசம் இழுத்து, பின்பு தேர்தல் முடிந்ததும் கை விரித்து விடுகிறது. இப்படியாக கடந்த ஏழு தேர்தல்களில் இதை நான் கண்டு வருகிறேன்.
இம்முறை தேர்தலில், பொதுமக்கள் சற்று விழிப்பாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
அனேகமாக, மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்பது ஏறத்தாழ உறுதியான விசயம். அதற்குள்ளாக அறிக்கை விட்டுள்ளபடி, எழைகளுக்கு வீடுகளைப் பெற்றுத் தரும் திட்டம் தற்போதைய அரசிடம் உண்மையிலேயே இருக்குமானால் அதற்குண்டான அடையாளங்கள் இப்போதே தென்படவேண்டும் என்பது மிக அவசியம்.