பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெற்றால் டெக்சி பெர்மிட்டுகள் நிறுவனங்களுக்கு அல்லாமல் டெக்சி ஓட்டுநர்களே நேரடியாக வழங்கக்கப்படும்.
பேர்மிட்டுகள் மட்டுமல்லாமல் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீமூடா டெக்சி ஓட்டுநர் சங்கத் தலைவர் எஸ்.மனோகரன் கேட்டுக்கொண்டார். மருத்துவ அட்டைகள் இருந்தால் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற முடியும் என்று கூறிய அவர், சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின்கீழ் சலுகைகளும் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
“பக்காத்தான் புத்ரா ஜெயா வென்றால், இவை எல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறோம்… நடப்பு அரசாங்கம் நாங்கள் பெர்மிட்டுகள் கேட்டால் டயர்களைக் கொடுக்கிறது. டயர்களைக் கடைகளில் வாங்கலாம். பெர்மிட்டுகளை வாங்க முடியுமோ?”, என்றவர் வினவ கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
டெக்சி ஓட்டுநர்கள் பக்காத்தான் தலைவர்களைச் சந்திக்கும் கூட்டமொன்று நேற்றிரவு பெட்டாலிங் ஜெயா சிவிக் மண்டபத்தில் நடைபெற்றது.
பக்காத்தான் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், பேராக்கின் முன்னாள் மந்திரி புசார் நிஜார் ஜமாலுடின், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு முதலிய பக்காத்தான் தலைவர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இரவு 8.30க்குத் தொடங்கிய அக்கூட்டத்தில், பக்காத்தான் அளிக்க முன்வந்த சலுகைகளால் டெக்சி ஓட்டுநர்கள் திருப்தி அடைந்தார்கள். தேர்தலில் பக்காத்தான் வென்றால் தனிப்பட்ட பெர்மிட்டுகள் வழங்கப்படும் என்று அன்வார் கூறியதை அவர்கள் மிகவும் வரவேற்றனர். தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அவர்கள் லியுவிடம் கொடுத்தனர்.
நீண்ட காலமாக இருந்துவரும் டெக்சி பெர்மிட் பற்றிக் கருத்துரைத்த அன்வார், டெக்சி அது ஒன்றும் சிரமமான விவகாரம் அல்ல என்றார்.
“இப்படிப்பட்ட சிறிய விவகாரங்களுக்குக்கூட அம்னோவால் தீர்வுகாண முடியவில்லை…..நஜிப், நீர் தோற்றுப் போனீர்”, என்றாரவர்.