திரெங்கானுவில் வெள்ளத்தின் காரணமாக வீடுகளில் அழையா விருந்தாளிகளாக வந்து சேர்ந்த பாம்புகளைப் பிடிப்பதில் சிவில் தற்காப்புத் துறை (ஜேபிஏஎம்) மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் திங்கள்கிழமையும் மட்டும் அது 41 பாம்புகளைப் பிடித்து உரிய அதிகாரிகளிடம் ஓப்படைத்திருப்பதாக மாநில ஜேபிஏஎம் அதிகாரி லெப்ட். நோர் அஸ்மாவி கூறினார்.
“அந்த இரண்டு நாள்களில் நாகப்பாம்பு உள்பட 41 வகை நச்சுப்பாம்புகளைப் பிடித்தோம்”. பாம்புகளால் யாரும் கடிபடவில்லை என்றும் அவர் சொன்னார்.
பாம்புகள் அவற்றின் புற்றுகளில் வெள்ளம் புகுந்து விடும்போது வீடுகளில் அடைக்கலம் தேடுகின்றன என்று நோர் அஸ்மாவி குறிப்பிட்டார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பாம்புகளைக் கண்டால் வெள்ள நடவடிக்கை மையங்கள் வழியாக ஜேபிஏஎம்-மின் உதவியை நாடலாம் என்றாரவர்.
-பெர்னாமா