ஊழலை முறியடிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) ஆற்றலை வலுப்படுத்தும் பொருட்டு 2009ம் ஆண்டுக்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தில் காணப்படும் பலவீனங்களைச் சரி செய்ய வேண்டும் என ஊழல் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுத் தலைவர் முகமட் ராட்சி ஷேக் அகமட் கேட்டுக் கொண்டுள்ளார்.
சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டின் புதல்வர் அரசாங்கக் குத்தகைகள் மூலம் நன்மை அடைந்துள்ளதாகக் கூறப்பட்ட போதிலும் முதலமைச்சரை விசாரிப்பதற்கு அந்தச் சட்டத்தின் 23வது பிரிவில் உள்ள ஒரு பலவீனம் தடையாக இருப்பதாக எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல் கூறியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
“ஆகவே நாம் 2009ம் ஆண்டுக்கான மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. ஊழலை குறைப்பதற்கு திருத்தப்பட வேண்டிய மற்ற சட்டங்களும் இருக்கின்றன,” என்று அவர் சினார் ஹரியானுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தில் உள்ள ஒருவர் அவருடைய சேவகர் ஒருவருக்கு குத்தகை கொடுக்கப்படுவதற்கு அங்கீகாரம் அளிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் அந்த 23வது பிரிவின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை கங்கார் எம்பியுமான அவர் சுட்டிக்காட்டினார்.
“எடுத்துக்காட்டுக்கு ஒரு குத்தகையைப் பெற வேண்டுமானால் தமது சேவகர் ஒருவர் அந்தக் குத்தகைக்கு விண்ணப்பத்திருந்தால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனச் சட்டம் சொல்வது அவருக்குத் தெரியும்.”
“அதனால் அவர் அந்தக் கூட்டத்தில் பங்கு கொள்கின்ற மற்றவர்களிடம் முன் கூட்டியே “தயவு செய்து அந்த விண்ணப்பத்தை” பரிசீலியுங்கள் எனச் சொல்லி விடுவார். இறுதியில் அவரது சேவகர் அந்தக் குத்தகைக்குத் தேர்வு செய்யப்படுவார். ஆனால் 2009ம் ஆண்டுக்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 23வது பிரிவை அவர் மீறவில்லை,” என்றார் அவர்.
அந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் அதனை மதிப்பீடு செய்வதற்கு சுயேச்சைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற தேர்வுக் குழு கருதுவதாகவும் அவர் சொன்னார்.
அதே சட்டத்தில் ஒருவருடைய செல்வம், வாழ்க்கை முறை ஆகியவை சம்பந்தப்பட்ட 36வது பிரிவையும் திருத்த வேண்டும் என்றும் ராட்சி கருதுகிறார்.
“ஒருவர் தமது பதவிக்கும் வேலைக்கும் மேலான செல்வத்தைச் சேர்த்திருந்தால் அது எங்கிருந்து வந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான அதிகாரம் எம்ஏசிசி-க்கு இல்லை.”
“எம்ஏசிசி அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகி விட்டன. அந்தச் சட்டத்தில் காணப்படும் பலவீனம் சரி செய்யப்படு எம்ஏசிசி வலுப்படுத்தப்பட வேண்டும். அதன் வழி அது மேலும் பயனுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் திகழ முடியும்.”
“அந்தச் சட்டம் திருத்தப்பட்டால் வழக்கத்துக்கு மாறாக பெரும் செல்வத்தைச் சேர்த்து விட்டதாக சந்தேகிக்கப்படுகின்றவர்கள் எம்ஏசிசி-க்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்,” என ராட்சி குறிப்பிட்டார்.