இலட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டது, தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டது அந்நாட்டின் உள்விவகாரமல்ல. அது மனித உரிமைகள் மீறலாகும் என்று பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று பெட்டாலிங் ஜெயாவில் கூறினார்.
“சிறிலங்காவில் நடந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இக்கொடூரச் செயல்கள் உள்நாட்டு விவகாரமல்ல. அவை மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விவகாரமாகும்”, என்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அன்வார் இப்ராகிம் கூறினார்.
“அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாட்டை அனைத்துலக சமூகம் கைவிட்டுவிட்டது.
“பக்கத்தான் சிறிலங்கா தமிழ் இனப் படுகொலை விவகாரம் மீது அக்கறை காட்டும்” என்று கூறிய அன்வார், இது மக்களின் ஆதரவை (தேர்தலுக்கு) திரட்டுவதற்காக அல்ல என்பதை வலியுறுத்தினார்.
சுமார் 500 பேர் பங்கேற்ற இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நேற்று காலை மணி 9 அளவில் தொடங்கியது.
பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் தமது உரையைத் தொடங்குவதற்கு முன்னர் பேசிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி. இராமசாமி, இம்மாநாட்டிற்கு அன்வார் ஏன் அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதை கூறினார்.
“அன்வார் அவர்களே, நீங்கள் இம்மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதற்கான காரணம், நீங்கள்தான் நாட்டின் அடுத்த பிரதமர்”, என்று மாநாட்டு பேராளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோரின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையில் கூறினார்.
சிறிலங்கா தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் குறித்த விவகாரங்களுக்கு தீர்வுகாண்பதற்கான ஒரே வழி சுதந்திர தமிழ் ஈழம் அமைக்கப்படுவதுதான் என்று துணை முதல்வர் இராமசாமி கூறினார்.
“பாலஸ்தீன மக்களின் போராட்டம் குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். அவர்களுக்குள்ள உரிமைகள்போல் ஈழத் தமிழர்களுக்கும் தங்களுடைய சொந்த உரிமைகளை நிர்ணயிக்கும் உரிமை உண்டு.
“முல்லைவாய்க்காலில் ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மலேசியா அதனை இனப் படுகொலை என்ற கோணத்திலிருந்து நோக்க வேண்டும். ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் நடந்த வாக்களிப்பில் நஜிப் ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்காமல் நடுநிலைமை வகித்தார். பக்கத்தான் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும்”, என்றார் இராமசாமி.
இந்நாட்டின் வளப்பத்திற்கு கடுமையாக உழைத்தவர்கள் இந்தியர்கள். அவர்களில் 90 விழுக்காட்டினர் தமிழர்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், “பக்கத்தான் ஆட்சியில் தமிழர்களுக்கு வளமான எதிர்காலம் இருக்க வேண்டும். சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற பேச்சுக்கே இடமிருக்கக்கூடாது”, என்று இராமசாமி மேலும் கூறினார்.
“தமிழ் மொழி, தமிழ்ப்பள்ளிகள், தமிழ் இடைநிலப்பள்ளிகள், அரசாங்க இலாகாகளில் வேலை வாய்ப்புகள் போன்றவை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
“உங்களுடைய தலைமைத்துவத்தில் இவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.
“தமிழர்களின் வரலாறு மிக நீண்டது. மொகஞ்சதாரோ, ஹரப்பாவிலிருந்து கடாரம் என்ற கெடா வரையில் தமிழர்களின் வரலாறு இருக்கிறது”, என்பதைச் சுட்டிக் காட்டிய இராமசாமி, “பக்கத்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; அது அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும்”, என்றார்.
மலேசியா பலரின் உழைப்பால் பலன் அடைந்துள்ளது. இந்தியர்கள், சீனர்கள் மற்றும் மேல்நாட்டினர் ஆகியோரின் உழைப்புடன் அவர்களின் சமயம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுடன் கலந்து ஒன்றிப்போய் இருக்கிறோம் என்பதை தெளிவுப்படுத்திய அன்வார் இப்ராகிம், அவர் ஜாவா சென்றிருந்த போது அங்குள்ள ஒரு மஸ்ஜித்தில் ஓர் இந்து சிலை வைக்கப்பட்டிருப்பது குறித்து வினவியதற்கு அந்த மஸ்ஜித்தில் இருந்த இஸ்லாமிய மகான் அச்சமின்றி அனைத்து சமயங்களையும் ஏற்றுக்கொள்வது எங்கள் நாட்டு வரலாற்றின் முக்கிய அம்சமாகும் என்று விளக்கமளித்ததாக கூறினார்.
பல்லின மக்களைக் கொண்ட நமது நாடு தொடர்ந்து மேலோங்க மலாய், முஸ்லிம் பெரும்பான்மையினர் இன மத பேதமின்றி ஒவ்வொருவரின் உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது அடிப்படை கூறாக இருக்க வேண்டும் என்பதை அன்வார் வலியுறுத்தினார்.
“தற்போது மக்களிடையே அமைதியைக் குலைக்கும் செயல்கள் காணப்படுகின்றன. மலாய்க்காரர்களின் எதிர்கால வாழ்க்கை, அவர்களின் ஆதிக்கம் போன்றவை வலியுறுத்தப்படுகின்றன. இந்த இனவாதப் பெருங்கூச்சல் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது.
“நான் இஸ்லாம் மற்றும் மலாய் மொழி ஆகியவற்றில் ஈடுபாடுள்ள ஒரு மலாய்க்காரர். ஆனால் வேறுபாடு இருக்கக்கூடாது. நாங்கள் எதிர்ப்பது அம்னோவின் இந்த வேறுபாடு காட்டும் கொள்கையைத்தான்”, என்று அன்வார் தெளிவுபடுத்தினார்.
பெரும்பான்மையினரான மலாய்க்காரர்களின் நிலை வலுவாக இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அன்வார், “இது சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் சொந்தமான நாடு. அவர்களுக்குரிய சமஉரிமை குறித்து கேள்வி எழுப்பும் உரிமை எவருக்கும் கிடையாது”, என்றார்.
“மொழி விவகாரம் குறித்த புரிந்துணர்வு இருக்க வேண்டும், பொறுத்துப்போக வேண்டும் என்பது முறையல்ல. அந்த உரிமை அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
“மலாய் மொழி கற்க வேண்டும். அதன் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவ்வாறே தமிழ் மொழியின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். தங்களுடைய குழுந்தையை எந்த மொழி பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானிக்க வேண்டும். அதற்கேற்ற வசதியை அரசாங்கம் வழங்க வேண்டும்”, என்று அன்வார் மேலும் கூறினார்.
“1940 ஆம் ஆண்டில் உலுசிலாங்கூரில் பிறந்த ஒருவருக்கு நீல நிற அடையாள அட்டை இல்லை. அவ்விவகாரத்தை என். சுரேந்திரன் கொண்டு வந்தார். அவருக்கு அன்வார் குடியுரிமை அளிக்கிறார் என்கிறார்கள்.
“நான் இந்தியருக்கு குடியுரிமை வழங்கவில்லை. அது அவரின் உரிமை. அவர்கள்களுடைய உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களின் உரிமைகளை தலைவர்கள் மறுக்கக்கூடாது”, என்று வலியுறுத்திக் கூறினார் அன்வார்.
இனிமேல், அன்வார் ஓர் இந்து ஆதரவாளர், தமிழ் ஆதரவாளர் என்பார்கள். நாளை முதல் அவர் ஒரு கிறிஸ்துவ ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்ட தொடங்கி விடுவார்கள் என்று அவர் கூறினார்.
இந்நாட்டு சீனர்கள் ஓர் அனைத்துலக மாநாட்டை நடத்தலாம். ஆனால், பெர்காசா அவர்களின் நாட்டுப்பற்று குறித்து கேள்வி எழுப்பும். தமிழர்கள் சிறிலங்கா மற்றும் தமிழ் நாடு குறித்து பேசுவதால், அவர்களின் நாட்டுப்பற்று குறித்தும் அவர்கள் பேசத் தொடங்குவார்கள் என்றார்.
பெரும்பாலான மலேசிய மக்கள் சிறிலங்கா விவகாரத்தை புரிந்துகொள்வதற்கு பரப்புரைகள் செய்யப்பட வேண்டும். அவ்விவகாரம் மனித உரிமை குறித்த கோட்பாடுகள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று கூறிய அன்வார், “தலைவர்கள் தங்களுடைய சொந்த மக்களையே கொள்ளையடிப்பதற்கு, கொலை செய்வதற்கு நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்”, என்று வினவினார்.
“அமைதி, சுதந்திரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கான தீவிரப் போராட்டம் தொடர வேண்டும்”, என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.
காலை மணி 9.00 க்கு தொடங்கிய இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டு மாலை மணி 7.00 வரையில் நீடித்தது.
இம்மாநாட்டில் இலங்கை, தமிழ் நாடு மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பேராளர்களும் உரையாற்றினர்.
மேலும், இந்நாடுகளின் பிரகடனங்களும் பேராளர்களின் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.