மே 13 பற்றிய உண்மையை அறிய நமது ஆவணங்களை ரகசிய நிலையிலிருந்து விடுவியுங்கள், குவா கியா சூங்

truthமே 13 சம்பவம் மீதான அம்னோ பதிப்பை வலியுறுத்தும் நோக்கம் கொண்ட-அதிகம் பேசப்படும்-தாண்டா புத்ரா திரைப்படத்தை பினாஸ் என்ற தேசிய திரைப்படக் கழகம் வெளியிடவிருக்கும் வேளையில் தி எட்ஜ் என்ற சஞ்சிகை மே 13 குறித்த தனது கட்டுரையை மீட்டுக் கொள்ள வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர்  கோரிக்கை விடுத்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் இயங்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக அம்னோவில் உருவாகியுள்ள புதிய முதலாளித்துவாதிகள் மறைமுகமாக மேற்கொண்ட முயற்சியே என 2007ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரைக்கு முரணாக அந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் கூறிக் கொண்டுள்ளார்.

மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு கொலையுண்டது தொடர்பில் தண்டிக்கப்பட்டுள்ள இரண்டு ஆடவர்கள் சமர்பித்துள்ள முறையீடு விசாரிக்கப்படுவது தொடர்ந்து தள்ளி வைக்கப்படுவது போல தாண்டா புத்ரா திரைப்படத்தின் வெளியீடும் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுகின்றது.

அந்தத் திரைப்படம் மீது பெரும்பாலான மலேசியர்கள் எதிர்மறையான கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடும் என அரசாங்கம் சந்தேகப்படுகின்றதா ? மே 13 சம்பந்தப்பட்ட சலித்துப் போன அந்த பழைய அதிகாரத்துவ பதிப்பு அம்னோ எதிர்ப்பு உணர்வுகளை அதிகரித்து விடும் என போலீஸ் சிறப்புப் பிரிவு தனது வேவுத் தகவல்களை அரசாங்கத்திடம் சமர்பித்து விட்டதா ?

அந்தத் திரைப்படம் திரையிடப்படுவது தொடர்ந்து தள்ளி வைக்கப்படுவது, அதன் இயக்குநருக்கு கன்னத்தில் அறையப்படுவதற்கு ஒப்பாகும். அந்தத் திரைப்படத்தில் அவருடைய படைப்பாற்றல் சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அதே வேளையில் வரலாற்று உண்மையை மறைப்பதற்கு உடந்தையாக இருப்பதில் அவர் மனநிறைவு கொண்டுள்ளதாகத் தோன்றுகின்றது.

சிறப்புப் பிரிவில் உண்மை புதைந்து கிடக்கிறது

என்னுடைய ஆய்வுக் கட்டுரை பிரிட்டிஷ் வட்டாரங்கள் ரகசிய நிலையிலிருந்து அகற்றிய ஆவணங்களை சார்ந்துள்ளது என -ஆராய்ச்சியாளர்கள் கற்பனைக்கும் உண்மைக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் என்பதைப் போல-  கல்வித் துறையைச் சாராத அம்னோ தரப்புக்கள் கேலி செய்தன.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்த நாட்டுக்கு சுதந்தரத்தை வழங்கும் போது கம்யூனிஸ்ட்கள் எதிர்க்கட்சிகள் ஆகியவற்றை புறக்கணித்து அம்னோவையும் கூட்டணியையும் ஆதரித்தனர் என்பது மலேசியா வரலாற்று ஆசிரியர்களுக்கு நன்கு தெரியும். இன வன்முறைகளையும் மலேசிய பாதுகாப்புப் படைகளின் பாரபட்சத்தையும்  வெளியுலகம் கண்டித்த வேளையில் ஊர்க்காவல் படைக்கு ஆயுதங்களை வழங்கியதை நியாயப்படுத்திய பிரிட்டிஷ்காரர்களுடைய இரட்டை வேடத்தை நான் என் புத்தகத்தில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

என்றாலும் அந்த ஆவணங்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளுடைய உள் மனது எண்ணங்களையும் அவர்களுடைய வேவுத் தகவல்களையும் பிரதிபலித்தன. அவை இன்று நமக்கு தகவல்களை அம்பலப்படுத்தும் வில்கிலீக்ஸ்-க்கு சமமானவை.

இப்போது நமக்கு முன்னே இருக்கின்ற யானையைப் பற்றிப் பேசுவோம். அவைதான் 1969ம் ஆண்டு மே 13 வன்முறை பற்றிய நமது சொந்த ரகசிய ஆவணங்கள்- அம்னோ உண்மையை அறிய ஆர்வம் கொண்டிருந்தால் நமது சொந்த ஆவணங்களைக் குறிப்பாக சிறப்புப் பிரிவில் உள்ளவற்றை ரகசிய நிலையிலிருந்து அகற்றுவதுதான் எளிதான சிறந்த வழியாகும்.

1987ம் ஆண்டு உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது என்னை விசாரணை செய்த சிறப்புப் பிரிவு அதிகாரிகள், புக்கிட் அமானில் உள்ள தங்களது ஆவணக் காப்பகம் இந்த நாட்டில் உள்ள எந்தப் பல்கலைக்கழக நூலகத்தைக் காட்டிலும் சிறந்தது என தம்பட்டம் அடித்துக் கொண்டது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.

ஆகவே 1969 மே-யில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய அரசாங்கம் விரும்புகிறதா; யார் அந்த வன்முறையைத் தொடங்கியது; அந்தச் சம்பவம் மீதான சைட் ஸாஹாரியின் கவிதையில் மறைமுகமாக குறிப்பிடப்பட்ட ” மறைவான கரங்கள் ” யார்; உண்மையில் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் ? அல்லது அவர்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்து நாம் இனிமேலும் நம்பாத பழைய கதையை திரும்பத் திரும்பக் கூற விரும்புகின்றனரா ?

அந்த வகையில் மலேசியர்கள் தகவல் சுதந்திரச் சட்டத்தை நடப்புக்கு கொண்டு வருவதிலும் அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தை ரத்துச் செய்வதிலும் அக்கறையுள்ள வேட்பாளர்களுக்கே மலேசியர்கள் தங்கள் வாக்கை அளிக்க வேண்டும்.

உண்மையும் சமரசமும்

வரலாற்றை எடுத்துக் கூறுவதற்கு பிடிஎன் என்ற  Biro Tatanegara Negara பாணியிலான முறைகளை நாம் இனிமேலும் சார்ந்திருக்க முடியாது. அதிகார வர்க்கம் தனது நிலைக்கு சவால் விடுக்கப்படுவதாக கருதும் ஒவ்வொரு முறையும் மக்களை அரசியல் ரீதியில் அச்சுறுத்துவதற்கு நமது வரலாற்றின் இருண்ட அத்தியாயத்தை பயன்படுத்துவதற்கு நாம் இனி அனுமதிக்கக் கூடாது.

அந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு சம்பந்தப்பட்ட எல்லா உண்மைகளும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய பெயர்கள் அறிவிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்படுவதற்கு உண்மை சமரச ஆணையம் ஒன்றை கூட்ட வேண்டும்.

தென்னாப்பிரிக்க உண்மை சமரச ஆணையம் பற்றிய குறிப்பு:

“நமது கடந்த காலத்தை  தார்மீக ரீதியில் ஏற்றுக் கொண்டு சமரசத்தை நோக்கி முன்னேறுவதற்கு உண்மை சமரச ஆணையம் அவசியமாகும்.”

மே 13 வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்கள், அவர்களது குடும்பத்தினரின் சாட்சியங்களைப் பெறுவதுடன் மே 13 உண்மை சமரச ஆணையம் இந்த நாட்டில் ரகசியமாக வைக்கப்பட்ட ஆவணங்களைக் குறிப்பாக சிறந்தது எனக் கூறப்பட்டுள்ள சிறப்புப் பிரிவு நூலகத்தில் உள்ளவற்றையும் அமைச்சரவையிடம் உள்ளவற்றையும் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் மே 13 பிசாசுகள் மறைந்து இறுதியில் அமைதியாக உள்ள ஒரு சமூகமாக நாம் உருவாக முடியும்.

——————————————————————————————————————————————————-

குவா கியா சூங் சுவாராம் ஆலோசகர் ஆவார்