‘அல்லாஹ்’ சர்ச்சை: கர்பால் லிம்-மிற்கு ஆதரவு அளிக்கிறார்

kitabகிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கேட்டுக் கொண்டிருப்பதை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆதரித்துப் பேசியிருக்கிறார்.

தலைமுறை தலைமுறையாக அந்த சொல் பயன்படுத்தபட்டு வரும் சபா, சரவாக் கிறிஸ்துவர்களை கருத்தில் கொண்டு லிம் வேண்டுகோள் விடுத்ததாக அவர் விளக்கினார்.

ஆகவே பினாங்கு முதலமைச்சர் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ள விஷயங்கள் முஸ்லிம்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என பினாங்கு அம்னோ செயலாளர் அஸ்ஹார் இப்ராஹிம் சாடியுள்ளது வியப்பை அளிப்பதாக கர்பால் சொன்னார்.

எந்த வேளையிலும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுடைய உணர்வுகளைப் பாதிக்க வேண்டியதில்லை என அவர் மேலும் சொன்னார்.

‘அல்லாஹ்’ என்ற சொல் சீக்கிய வேதத்தில் 37 இடங்களில் காணப்படுகின்றது. சீக்கியர்கள் தங்கள் வேதத்தை ஒதும் போது அந்த சொல்லைப் பயன்படுத்துவது மீது முஸ்லிம்கள் இதுவரையில் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“வங்காள மொழியிலும் கூட அல்லாஹ் என்னும் சொல் காணப்படுகின்றது. மலேசியாவில் ஒராங் அஸ்லி மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர். மலாக்காவில் பாபா சமூகத்தினரும் அவ்வாறே செய்கின்றனர்.”

ஆகவே அந்த வேண்டுகோளை விடுத்த லிம்-முக்கு எந்த தீய நோக்கமும் இல்லை என கர்பால் சொன்னார்.

முதலமைச்சர் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் அந்த வேண்டுகோளில் மறைமுகமான நோக்கம் ஏதுமில்லை என்றார் அவர்.

எனவே லிம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை விடுப்பதில் நியாயமே இல்லை என்றும் கர்பால் தெரிவித்தார்.