துணைப் பிரதமர்: நான்கு ஆண்டுகள் ஏமாற்றப்பட்ட சிலாங்கூர் மக்கள் இப்போது பிஎன் -னுக்கு வாக்களிக்க வேண்டும்

dpmபிகேஆர் தலைமைத்துவத்தின் கீழ் மாநில அரசாங்கம் நடத்திய பிரச்சாரத்திலும் வழங்கிய வாக்குறுதிகளிலும் ஏமாந்த சிலாங்கூர் மக்கள் வரும் தேர்தலில் பிஎன் -னைத் தேர்வு செய்ய வேண்டும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சிலாங்கூர் மக்களுக்கு மாநில அரசாங்கத்தின் உண்மையான நிறம் தெரிந்து விட்டது என்றார் அவர்.

அதே வேளையில் தேசியப் பொருளாதாரத்துக்குத் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கொண்டு வந்ததின் மூலம் நாட்டை நிர்வகிப்பதில் தனக்குள்ள அனுபவத்தை பிஎன் மெய்பித்துள்ளது என முஹைடின் சொன்னார்.

பாஸ்-பிகேஆர்-டிஏபி ஆகியவை அடங்கிய எதிர்த்தரப்புக் கூட்டணியைப் போல் அல்லாமல்  பிஎன் தேசிய மேம்பாட்டுக் கொள்கைகளையும் திட்டங்களையும் அமலாக்குவதில் ஒன்றுபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் அடிக்கடி பிரச்னைகள், அரசியல் வாக்குவாதங்கள், நெருக்கடிகள் ஏற்படுவதைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.”

முஹைடின் நேற்றிரவு சிலாங்கூர் பிஎன் ஏற்பாடு செய்த சிலாங்கூரை நேசியுங்கள் விழாவைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

அந்தப் பிரச்னைகளில் தண்ணீர் விவகாரமும் ஒன்றாகும். மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் அந்த விஷயம் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றார் அவர்.

2014ம் ஆண்டு தண்ணீர் நெருக்கடி உருவானால் அதற்கு மாநில அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் முஹைடின் எச்சரித்தார்.

அந்த நிகழ்வில் முஹைடின் துணைவியார் நோராய்னி அப்துல் ரஹ்மான், சிலாங்கூர் மசீச தலைவர் டொனால்ட் லிம், மஇகா தலைவர் ஜி பழனிவேல், வெளியுறவுத் துணை அமைச்சர் கோகிலன் பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

பெர்னாமா