நாட்டின் சொத்துக்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதாக அன்வார் வாக்குறுதி

anwarபக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் சொத்துக்களும்  பொருளாதாரமும் நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படும் என்றும் எந்த ஒரு தலைவரும் தங்களை வளப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்துள்ளார்.

அந்த வாக்குறுதி பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும் தாம் கொடுக்கும் உறுதிமொழி அது தான் என ஐந்து நிமிடங்களுக்கு ஒடும் புத்தாண்டு வீடியோ செய்தியில் அன்வார் தெரிவித்துள்ளார்.

“எந்த ஒரு கொள்ளையும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால் நாட்டின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வாகம் செய்யப்படும் என்ற சிறிய வாக்குறுதியை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். ஒர் அமைச்சரோ அல்லது பிரதமரோ அல்லது ஆளும் வர்க்கத்தினரோ நாட்டின் சொத்துக்களை எடுத்துக் கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்றார் அவர்.

“2013ம் ஆண்டில் மக்களுக்கு நாங்கள் கொடுக்கும் வாக்குறுதி அது தான். நாடு இவ்வாண்டு தொடக்கத்தில் தேர்தலுக்கு ஆயத்தாமாகும் வேளையில் அந்த வாக்குறுதியை சாதிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

ஊழல் பற்றியும் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக பில்லியன் கணக்கான ரிங்கிட் வெளியேறியுள்ளது பற்றியும் வால் ஸ்டீரிட் சஞ்சிகை, ஜிஎப்ஐ என்ற உலக நிதி நேர்மை அமைப்பு அறிக்கை ஆகியவை தகவல் வெளியிட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

அந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ஆனால் அம்னோ/பிஎன் -னில் உள்ள ஆளும் வர்க்கம் அது குறித்து கவலை அடைந்துள்ளதாகத் தெரியவில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.

“நாட்டின் சொத்துக்களை திருடுவதை தலைவர்கள் நிறுத்திக் கொள்வதையும் ஆளும் வர்க்கத்தினர், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது சேவகர்கள், நாட்டு நிதிகள் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதையும் பொருளாதாரம் நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.”

பொருளாதாரம் நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டால் வருமானம் சமமாக விநியோகம் செய்யப்பட்டும் என்றும் அதனைத் தொடர்ந்து பொருளாதார வளப்பத்தில் தங்களுக்கு உரிய பங்கு கிடைக்காமல் ஒதுக்கப்படுவதாக இனங்களுக்கு இடையில் மகிழ்ச்சியின்மை ஏற்படாது என்றும் அன்வார் சொன்னார்.

உலகில் சீனாவுக்கு அடுத்த நிலையில் இரண்டாவதாக மலேசியாவிலிருந்து கிட்டத்தட்ட 200 பில்லியன் ரிங்கிட் சட்ட விரோதமாக வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஜிஎப்ஐ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் லஞ்சம் காரணமாக தாங்கள் வர்த்தகத்தை இழப்பதாக தெரிவித்துள்ள நிறுவனங்கள் எண்ணிக்கை மலேசியாவில் மிக அதிகம் என்பதை ஒர் அனைத்துலக ஆய்வு காட்டுவதை அனைத்துலக வெளிப்படை அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அனைவருக்கும் இலவசக் கல்வி

பொருளாதாரத்தை சிறந்த முறையில் நிர்வாகம் செய்வதின் மூலம் தொடக்கப்பள்ளிக் கூடம் முதல்பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வியை வழங்குவதாகவும் பெர்மாத்தாங் எம்பி-யுமான அன்வார் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடியாதவர்களுக்கு அவர்களுடைய தொழில் தேர்ச்சியை வலுப்படுத்திக் கொள்வதற்கு பலவகையான வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

“தேர்தல் நெருங்கி வருவதால் இந்த வாக்குறுதி குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். எரி வாயு வளங்கள், செம்பனை எண்ணெய், வருமான வரி ஆகியவற்றின் மூலம் பொருளாதார வலிமையும் ஆற்றலும் நமக்கு இருப்பதால் நான் அதனைச் சொல்லவில்லை.”

“பொருளாதார நிர்வாகமே முக்கிய பிரச்னையாகும். நான் கல்வி மீது கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் அந்தப் பிரச்னை நெருக்குதலை அளிக்கும் விஷயமாகும். நாங்கள் வீடமைப்பு, சுகாதாரம், விலை நிலைத்தன்மை ஆகியவை மீதும் நாங்கள் அக்கறை செலுத்துவோம்,” என்றும் அன்வார் சொன்னார்.

இன வம்சாவளி, சமய, சமூக நிலை வேறுபாடின்றி கல்வி மீது கவனம் செலுத்தும் போது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தேவையான மனித மூலதனத்தை நாடு உருவாக்க இயலும்.