சிலாங்கூர் பிஎன் கம்யூட்டர் ரயில்களில் “நேசியுங்கள் விழாவை” நடத்துகின்றது

BNமலாயான் ரயில்வேயின் கேடிஎம் கம்யூட்டர் சேவை, கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆறு பெட்டிகளைக் கொண்ட தனது ரயில்களில் ‘Sayangi BN’ (சிலாங்கூரை நேசியுங்கள்) என்னும் தலைப்பிலான வீடியோக்களை திரையிட்டு வருகின்றது.

வரும் தேர்தலில் சிலாங்கூரைப் பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து கைப்பற்றுவதற்கு பிஎன் தீவிரமாக முயற்சி செய்து வரும் வேளையில் அந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மூன்று நிமிடங்களுக்கு ஒடும் அந்த வீடியோ ஒளிப்பதிவு, மக்களுடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உரையாடுவதைக் காட்டுகின்றது. அந்த ஒளிப்பதிவுக்கு ‘sekian lama aman sejahtera’ ( இவ்வளவு காலம் அமைதியும் ஒற்றுமையும் நிலவியது) என விளக்கக் குறிப்பு அதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிஎன் சின்னமும் ‘Yakini BN, Sayangi Selangor’ (பிஎன் மீது நம்பிக்கை வையுங்கள், சிலாங்கூரை நேசியுங்கள்) என்ற சுலோகமும் காணப்படுகின்றன.

சிலாங்கூர் பிஎன் ஏற்பாடு செய்துள்ள ‘Sayangi Selangor’ (சிலாங்கூரை நேசியுங்கள்) என்னும் விழாவை ஒட்டி கடந்த டிசம்பர் 29ம் தேதியிலிருந்து அந்த வீடியோ காட்டப்படுவதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

எவ்வளவு காலத்துக்கு அது காட்டப்படும் என்பதையும் அது பணம் செலுத்தப்பட்ட விளம்பரமா அல்லது இலவச விளம்பரமா என்பதையும் அந்த வட்டாரத்தினால் தெரிவிக்க முடியவில்லை.BN1

அதனை அறிந்து கொள்ள முறையான வேண்டுகோளைச் சமர்பிக்குமாறு தொடர்பு கொள்ளப்பட்ட போது Keretapi Tanah Melayu Bhd (KTMB) தலைவர் எலியாஸ் காதிர் கூறினார்.

“நீங்கள் அந்தக் கேள்விகளை மின் அஞ்சல் செய்வது நல்லது என நான் கருதுகிறேன். அது மேலும் முறையானதாக இருக்கும்,” என்றார் அவர்.

சிலாங்கூரில் உள்ள கம்யூட்டர் நிலையங்களில் பிஎன் கொடிகள் பறக்கவிடப்பட வேண்டும் எனத் தான் உத்தரவிட்டதாகக் கூறப்படுவதை கடந்த ஏப்ரல் மாதம் KTMB மறுத்தது.

கடந்த ஜுலை மாதம் தொடக்கம் கம்யூட்டர் ரயில் பெட்டிகளில்  ‘Sayangi Selangor’ விளம்பரங்கள் காணப்படுகின்றன. “வாழ்க்கைச் செலவு கூடியுள்ளதால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நாங்கள் செவிமடுக்கிறோம்..” “உங்களுடைய கல்வித் தேவைகளையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்” என அந்த விளம்பரங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன.

அது பணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று சிலாங்கூர் மாநில பிஎன் செயலாருமான KTMB நிர்வாக வாரியத் தலைவர் முகமட் ஜின் முகமட் கூறினார்.