வறுமையும் 60 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சுத்திகரிப்பு பெட்ரோல் ரசாயன ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்துக்கு வழி விட வேண்டிய கட்டாயமும் பெங்கெராங்கில் வசித்த மூவர் கொண்ட குடும்பம் தனது அவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 2013ம் ஆண்டின் முதல் நாளன்று தற்கொலை செய்து கொள்வதற்கு வழி வகுத்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
62 வயதான ஆடவரும் 57 வயதான அவர் மனைவியும் அவர்களுடைய மன வளர்ச்சி குன்றிய 20 வயது மகனும் பெங்கெராங் கம்போங் ஜாவாவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.
அந்த வீட்டிலிருந்து புகை வெளியாவதைக் கண்ட அண்டை வீட்டுக்காரர் ஒருவர் நேற்றுக் காலை 10 மணி அளவில் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கோத்தா திங்கி ஒசிபிடி Supt சே மஹாஸான் சே எய்க் கூறினார்.
“நாங்கள் அந்த வீட்டுக்குள் சென்றோம். படுக்கை அறையில் இரண்டு ஆடவர்கள், ஒரு மாது ஆகியோரது சடலங்களைக் கண்டோம். ஏதாவது ஒன்றை எரித்து அந்தப் புகையை சுவாசித்ததின் மூலம் மூச்சுத் திணறி அந்தக் குடும்பம் மரணத்தைத் தழுவியிருக்க வேண்டும்,” என அவர் சொன்னதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தாங்கள் வறுமையில் வாடுவதால் தமது குடும்பத்தைக் கொன்று விட்டு தாமும் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக கணவர் அண்டை வீட்டுக்காரரிடம் கூறியிருந்ததாக சே மஹாஸான் சொன்னார்.
“வீட்டில் கிரிமினல் நோக்கம் ஏதும் இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்பதை தொடக்க புலனாய்வுகள் காட்டின,” என்றும் அவர் தெரிவித்தார்.
மூன்று சடலங்களும் சவப் பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அந்தக் குடும்பம் தங்கியிருந்த வீட்டு நிலம் பெட்ரோல் ரசாயனத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் குடும்பம் இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அதிக மன உளைச்சலுக்கு இலக்கானது என சீன மொழி ஏடான சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், ஜோகூர் மாநில அரசாங்கம், டயலாக் குழுமம், ராயல் வோப்பாக் என்னும் டச்சு நிறுவனம் ஆகியவை கூட்டாக அந்த 60 பில்லியன் ரிங்கிட் திட்டத்தை அமலாக்கி வருகின்றன. மொத்தம் 9,000 ஹெக்டர் பரப்புள்ள அந்தத் திட்டம் ஜோகூரின் தென் கோடியில் உள்ள குறைந்தது 10 கிராமங்களைப் பாதித்துள்ளது.
உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு அந்தத் திட்டத்துக்கு எதிரான இயக்கத்தை கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கினர்.