தடை செய்யப்பட்டுள்ள பெர்சே 2.0 அமைப்பு பரிந்துரைகளை வழங்குவதை பிஎஸ்சி என்னும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு வரவேற்காது என அந்தக் குழுவின் தலைவர் மாக்ஸிமுஸ் ஜானிட்டி ஒங்கிலி தன் மூப்பாக செய்துள்ள முடிவை பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
ஒங்கிலி சொந்தமாக அத்தகைய முடிவுகளை செய்யப் போகிறார் என்றால் அவரே எல்லாவற்றையும் செய்யலாம் என அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள பக்காத்தான் எம்பி-க்களான பாஸ் கோலக் கிராய் உறுப்பினர் டாக்டர் ஹாட்டா ராம்லியும் டிஏபி ராசா உறுப்பினர் அந்தோனி லோக்-கும் கூறினர்.
“ஒங்கிலி அமைச்சராக இருந்த போதிலும் எங்களைப் போன்று குழுவில் அவரும் ஒர் உறுப்பினரே,” என ஹாட்டா கூறினார். நேற்று நிருபர்களிடம் பேசுவதற்கு முன்னர் அந்த அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜுலை 9ம் தேதி பேரணிக்கு முன்னதாக சங்கச் சட்டத்தின் கீழ் பெர்சே அமைப்பு சட்டவிரோதமானது அறிவிக்கப்பட்டுள்ளதால் அதன் உறுப்பினர்கள் அந்த அமைப்பின் பிரதிநிதிகளாக அல்லாமல் தனிநபர்களாக விவாதங்களில் கலந்து கொள்ளலாம் என ஒங்கிலி நேற்று கூறியிருந்தார்.
“பெர்சே பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல. அவர்கள் தனிநபர்களாக வரலாம். நிச்சயம் பெர்சே 2.0ன் தலைவர் எஸ் அம்பிகா, மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் உறுப்பினராக அல்லது டத்தோ அம்பிகா என்ற தனிநபராக வரலாம்,” என்றும் ஒங்கிலி குறிப்பிட்டிருந்தார்.
திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட தேர்தல் சீர்திதிருத்தம் மீதான பிஎஸ்சி-யில் ஐந்து பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூன்று பக்காத்தான் எம்பி-க்களும் ஒரு சுயேச்சை உறுப்பினரும் இடம் பெற்றுள்ளனர். அந்தக் குழுவின் முதல் கூட்டம் அக்டோபர் 12ம் தேதி நடைபெறவிருக்கிறது.
“அவர் அந்த விவகாரத்தில் பெர்சே சம்பந்தப்படாது என அறிவித்துள்ளார். அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் அவர் மட்டும் அந்த முடிவைச் செய்துள்ளார். முதல் கூட்டமே இன்னும் நடைபெறவில்லை. அந்த முதல் கூட்டத்தில் தான், விதிமுறைகள் முடிவு செய்யப்படவிருக்கின்றன,” என ஹாட்டா குறிப்பிட்டார்.
‘நாங்கள் ரப்பர் முத்திரைக் குழு அல்ல’
மொத்தம் ஆறு பொது விசாரணைகள் நடைபெறும் என ஒங்கிலி அறிவித்துள்ளதும் அவர் குழு ஒப்புதல் இல்லாமல் செய்த இன்னொரு முடிவு என லோக் சொன்னார்.
“நாம் முடிவுகளைக் கூட்டாக கூட்டத்தில் எடுக்க வேண்டும். குழு அங்கீகாரம் இல்லாமல் அவர் தன்மூப்பாக முடிவுகளைச் செய்யக் கூடாது,” எனக் கூறிய லோக், அந்தக் குழுவின் பணிகள் “தவறான பாதையில்” அடியெடுத்து வைத்துள்ளதாகச் சொன்னார்.
“அந்தக் குழு இரு தரப்புக் குழு என்பதை நான் ஒங்கிலிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் செய்யும் ஒவ்வொரு முடிவையும் ஏற்றுக் கொள்ளும் ரப்பர் முத்திரைக் குழு அல்ல அது. ஒவ்வொரு முடிவும் இணக்க அடிப்படையில் இருக்க வேண்டும்,” என்று அந்த ராசா எம்பி குறிப்பிட்டார்.