மூலதன வெளியேற்றம் பற்றி விளக்க ஜிஎப்ஐ மலேசியாவுக்கு வருகிறது

anwarநிதிக் கண்காணிப்பு அமைப்பான ஜிஎப்ஐ எனப்படும் அனைத்துலக நிதிக் கழகம், மலேசியாவிலிருந்து மூலதன வெளியேற்றம் தொடர்பான தனது ஆய்வை எடுத்துக் கூறுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.

சிலாங்கூர் அரசாங்கம் ஏற்பாடு செய்யும் கருத்தரங்கு ஒன்றில் அந்த விளக்கம் அளிக்கப்படும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.illicit1

அந்தக் கருத்தரங்கை ஜனவரி 17ம் தேதி நடத்துவதற்கு தற்காலிகமாக தேதி குறிக்கப்பட்டுள்ளது என்றும்  அந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு பாங்க் நெகாராவுக்கு முறையாக அழைப்பு விடுக்கும் கடிதம் ஒன்றை சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் அன்வார் இப்ராஹிம் அனுப்புவார் என்றும் அவர் சொன்னார்.

2010ம் ஆண்டு மலேசியாவிலிருந்து 196,8 பில்லியன் ரிங்கிட் வெளியேறியுள்ளதாக ஜிஎப்ஐ ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளது. உலகில் கள்ளத்தனமாக பணம் வெளியேறும் நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்த நிலையில் மலேசியாவை அந்தத் தொகை வைத்துள்ளது.

“அந்தத் தகவல் குறித்த மேல் விவரங்களையும் அந்தப் புள்ளி விவரத்தைப் பெறுவதற்கு ஜிஎப்ஐ பின்பற்றிய வழிமுறைகளையும் அது தெரிவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் பாங்க் நெகாராவையும் இதர சம்பந்தப்பட்ட தரப்புக்களையும் முறையாக அழைப்போம்,” என அன்வார் இன்று நிருபர்களிடம் கூறினார்.

சட்ட விரோதமாக மூலதனம் வெளியேறும் விஷயத்தை பாங்க் நெகாரா கவர்னர் ஜெட்டி அக்தார் விளக்க வேண்டும் என அன்வார் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருக்கிறார்.