டாக்டர் மகாதீர்: 2020 இலட்சியத்தை அடைவதற்கு நடப்பு முறையைத் தொடருங்கள்

2020ல் வளர்ச்சி அடைந்த நாடு என்னும் இலட்சியத்தை நாடு அடைவதற்கு உதவியாக வளப்பத்தையும் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்ளும் நடப்பு முறை தொடர வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.

அந்த முறை குறிப்பாக நாட்டின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அறிமுகம் செய்த அதிகாரப் பகிர்வு முறை மலேசியாவைப் போன்ற பல இன நாட்டுக்கு சிறந்த தீர்வு என மெய்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“ஒரு கூட்டணியின் கீழ் வெவ்வேறு இனங்களைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து பாடுபடும் கோட்பாட்டை நாம் பெற்றுள்ளோம்.”

“அந்த முறை முதலில் கூட்டணியின் கீழ் நல்ல விதமாக செயல்பட்டுள்ளது. இப்போது பாரிசான் நேசனலிலும் அது தொடருகிறது.”

“அது அடுத்தடுத்து எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கூட்டரசு நிலையிலும் மாநில நிலையிலும் அரசாங்கங்களை அமைத்து வந்துள்ளது,” என அவர் நேற்றிரவு சிபுவில் ஆயிரம் பேர் பங்கு கொண்ட கூட்டத்தில் கூறினார்.

பூமிபுத்ரா பட்டதாரிகள் சங்க அழைப்புக்கு இணங்க அவர் சிபுவுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டார்.

‘நாட்டின் வளப்பத்தை அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும் கொள்கை’

வளப்பத்தைப் பகிர்ந்து கொள்வது பற்றிக் குறிப்பிட்ட டாக்டர் மகாதீர், நாட்டின் வளப்பத்தை அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும் கொள்வதே எப்போதும் கொள்கையாக இருந்து வந்துள்ளது என்றார்.

“எண்ணெய் எரிவாயு வளங்கள், செம்பனை , ரப்பர், மிளகுத் தொழில்கள் நாட்டின் வளப்பமாகும்.”

“என்றாலும் கோலாலம்பூர் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரிய வர்த்தகங்களிடமிருந்தும் நமக்கு வளப்பம் கிடைக்கிறது. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பணக்காரரோ அந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதே நமது முறையாகும்,” என்றார் அவர்.

அவ்வாறு வசூலிக்கப்படும் வரிகளும், வருமானமும் நாடு முழுவதும் மறு விநியோகம் செய்யப்படுவதாக மகாதீர் சொன்னார். அதன் வழி பெர்லிஸ் போன்ற சிறிய மாநிலங்களுக்கு மேம்பாட்டுக்கு நிதி உதவி கிடைக்கும். அவை பின் தங்கி விட மாட்டா.

பெர்னாமா