டிஏபி மீது தவறான எண்ணங்கள் ஏற்படக் கூடும் என அறிந்திருந்தும் அண்மைய கட்சித் தேர்தல்களில் கண்டு பிடிக்கப்பட்ட தவறு தொடர்பான உண்மையை வெளியிடுவது என அதன் தலைமைத்துவம் ஒருமனதாக ஒப்புக் கொண்டதாக அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார்.
“கட்சி மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் உண்மையைச் சொல்ல வேண்டும் என நாங்கள் விரும்பியதே முக்கியமானது. டிஏபி அந்தக் கோட்பாட்டை கடைப்பிடிக்கிறது. தொடர்ந்து அவ்வாறே செய்யும்.”
“கட்சித் தேர்தல் அதிகாரி வெளிப்படையாகத் தவறை ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார். அது போன்ற தவறு ஏதும் நிகழ்ந்து விட்டால் நாம் அதனை ஒப்புக் கொண்டு உண்மையைப் பேச வேண்டும்.”
“நாம் பொய்யுடன் வாழ முடியாது. நாம் அது குறித்து கௌரவமாக நடந்து கொள்ள வேண்டும். அதே கருத்துக்களை கொண்டுள்ள என் சகாக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என பினாங்கு முதலமைச்சர் இன்று நிருபர்களிடம் கூறினார்.
கட்சித் தேர்தல் முடிவுகளை ஒருங்கிணைத்த கணினி பதிவுகளில் தவறு நிகழ்ந்துள்ளதைக் கட்சி கண்டு பிடித்த பின்னர் திருத்தத்தை அறிவிக்க வேண்டும் என தாம் தெரிவித்த யோசனையை ஏற்றுக் கொண்ட டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கும் அவர் நன்றி கூரினார்.
“டிசம்பர் 16ம் தேதி கட்சியின் தேசியப் பேரவைக்குப் பின்னர் தாம் தவறு செய்து விட்டதாக தேர்தல் அதிகாரி பூய் வெங் கியோங் என்னிடம் தெரிவித்தார்,” என பாடாங் கோத்தா லாமாவில் பினாங்கு நகராட்சி மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட சடங்கில் கலந்து கொண்ட பின்னர் லிம் நிருபர்களைச் சந்தித்தார்.
எப்படி அந்தத் தவறு நிகழ்ந்தது என்பது தமக்கு புரியா விட்டாலும் அந்தத் தவறை அறிவிப்பது முக்கியம் எனத் தாம் எண்ணியதாக அவர் மேலும் சொன்னார்.
இனிமேல் தவறுகள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் நிபுனரும் கட்சி உறுப்பினருமான ஒங் கியான் மிங் தலைமையில் ஒர் உள் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அந்தத் தவறை ஒங் உறுதி செய்ததும் அதனை சுயேச்சை கணக்காய்வாளர் ஒருவரும் உறுதிப்படுத்தினார்.
அந்தத் தவறை அறிவிப்பதற்கு ஏன் 16 நாட்கள் பிடித்தது என்பதை விளக்கிய போது லிம் அந்த விவரங்களை வெளியிட்டார்.
எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாமல் இருக்க கணக்காயர் நிறுவனம் ஒன்று தேர்தலை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கான தேர்தலில் 31 முதல் 38 வது இடம் வரை இருந்த வேட்பாளர்களுக்கு (அதில் லிம்-மின் அரசியல் செயலாளட் ஜைரில் கிர் ஜொஹாரியும் ஒருவர்) கிடைத்த வாக்கு எண்ணிக்கை, 61 முதல் 68வது இடம் வரை இருந்த வேட்பாளர்களுக்கு (அதில் அமைப்புச் செயலாளரான வின்சென்ட் வூ-வும் ஒருவர்) கொடுக்கப்பட்டு விட்டது.
அந்தத் தவறு ஜைரிலுக்கு பெரிய விஷயமாகும். ஏனெமில் முதலில் அவருக்கு 304 வாக்குகள் மட்டுமே கிடைத்ததாக பதிவு செய்யப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட முடிவுகளின் படி அவருக்கு 803 வாக்குகள் கிடைத்துள்ளன. அது 499 வாக்குகள் வித்தியாசமாகும்.