சுகாதார அமைச்சு: ‘புகைக் குண்டுகளை’ வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

துங் ஷின் மருத்துவமனை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சுகாதார அமைச்சின் அறுவர் கொண்ட குழு, அந்த மருத்துவமனைக்கு அருகில் இருந்த மகப்பேறு மருத்துவமனைக்குள் புகைக் குண்டுகளை வீசிய போலீஸ் அதிகாரிகள் மீது உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்கும் பொருட்டு புகைக் குண்டுகளை வீசிய போலீஸ் அதிகாரிகள் மீது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என அந்தக் குழு வலியுறுத்தியது.

துங் ஷின் மருத்துவமனையிலிருந்து நிர்வாக ரீதியில் தனியாக இயங்கும் சிஎம்எச் என்ற அந்த சீனர் மகப்பேறு மருத்துவமனை வளாகத்துக்குள் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்தது.

சிஎம்எச் 2006ம் ஆண்டு தொடக்கம் இயங்கவில்லை. அது இவ்வாண்டு டிசம்பர் மாதம் விரிவான முறையில் புதுப்பிக்கப்படவிருக்கிறது.

மருத்துவமனை வளாகத்துக்குள் போலீசார் நீரைப் பாய்ச்சிய போதிலும் மருத்துவமனை வளாகத்துக்குள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாக கூறப்படுவது உண்மை அல்ல என்று அந்தக் குழு முடிவு செய்துள்ளது.

ஜுலை 9ம் தேதி நிகழ்ந்த பெர்சே பேரணியின் போது அந்த மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் கலகத் தடுப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு அந்த விஷயத்தை ஆராய உயர் நிலைக் குழு ஒன்றை அமைத்தது.

போலீஸ் நடவடிக்கை துங் ஷின் மருத்துவமனை நடவடிக்கைகள் மீது தாக்கத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை எனவும் அந்தக் குழு தெரிவித்தது.