தமக்கு எதிராக வழக்குப் போடுமாறு போராளி ஹாரிஸ் இப்ராஹிம், அப்ராஹாமுக்குச் சவால்

harrisவழக்குரைஞரான சிசில் அப்ரஹாம், அவரது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு தமக்கு எதிராக வழக்குப் போடுமாறு  மனித உரிமைப் போராளியான ஹாரிஸ் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார்.

தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்ததின் மூலம் தொழில் ரீதியில் தவறாக நடந்து கொண்டதற்காக சிசிலை விசாரிக்குமாறு ஹாரிஸ் ஏற்கனவே வழக்குரைஞர் மன்றத்திடம் புகார் செய்துள்ளார்.

“நான் உங்களுக்கு சொல்வது இதுதான், வழக்குரைஞர் மன்றம் நீண்ட காலம் எடுத்துக் கொள்வது உங்களுக்கு விருப்பமாகக் கூட இருக்கலாம். உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு உங்களுக்கு நான் ஒரு வழியை ஏற்படுத்தித் தருகிறேன். என் மீது வழக்குப் போடுங்கள்,” என ஹாரிஸ் தமது வலைப்பதிவில் இன்று எழுதியுள்ளார்.

சிசில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பாலசுப்ரமணியத்தின் வழக்குரைஞர் அமெரிக் சித்து சந்தேகம் தெரிவித்துள்ளதையும் ஹாரிஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

“அமெரிக் குறிப்பிட்டு சொல்லும் போது வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ-யும் மற்றவர்களும் அந்த  விவகாரம் மீது இழுத்துக் கொண்டே போவதும் உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு விரைவான வாய்ப்பை உங்களுக்குத் தராமல் போவதும் நியாயமாகத் தோன்றவில்லை,” என ஹாரிஸ் சொன்னார்.

கொலையுண்ட அல்தான்துயா ஷாரிபு-உடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை தொடர்புபடுத்தி பாலசுப்ரமணியம் கையெழுத்திட்ட முதலாவது சத்தியப் பிரமாணத்தில் காணப்பட்ட பகுதிகள்  அவருடைய இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டிருந்தன.