இந்த நாட்டின் தேசிய மொழியான பாஹாசா மலேசியாவின் பயன்பாட்டை பினாங்கு மாநிலம் புறக்கணிக்கிறதா என்பது மீது முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கும் தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திமுக்கும் இடையில் வாக்கு வாதம் தொடருகிறது.
பினாங்கில் நிகழ்ந்த அந்த தனியார் நிகழ்வில் தாம் பாஹாசா மலேசியாவில் பேசியதை மறுப்பதின் மூலம் ராயிஸ், “தம்மை பாஹாசா மலேசியா ஹீரோவாகக் காட்டிக் கொள்ளும் ஆபத்தான விளையாட்டை” நிறுத்திக் கொள்ள வேண்டும் என லிம் கூறினார்.
ராயிஸின் கருத்துக்கள் “தீய நோக்கம் கொண்ட பொய்கள்” என வருணித்த லிம் ராயிஸ் தமக்கு எதிராக “கடுமையான தனிப்பட்ட தாக்குதல்களை” தொடுத்து வருவதாகவும் சொன்னார்.
தனியார் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றுக்கு மாநில அரசாங்கம் பொறுப்பாக்குவதின் மூலம் ராயிஸுக்கு எது தவறு எது சரி என்ற உணர்வு கூட இல்லை என லிம் மேலும் சொன்னார்.
பினாங்கு முதலமைச்சரும் பாஹாசா மலேசியாவில் பேசினார் என்பதை ஒப்புக் கொள்ள அமைச்சர் மறுக்கிறார் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செப்டம்பர் 29ம் தேதி நடைபெற்ற ஹான் சியாங் விருந்தில் தாம் மட்டுமே பாஹாசா மலேசியாவில் பேசியதாக ராயிஸ் முதலில் கூறியது பொய் என்றும் லிம் குறிப்பிட்டார்.
ராயிஸ், அந்த நிகழ்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பிரதிநிதித்து அந்த விருந்தில் கலந்து கொண்டார்.
பினாங்கு மாநில அரசாங்கம் தேசிய மொழியைப் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியதற்காக தம்மை பொய்யர் என வருணித்த லிம்மை ஜெலுபு எம்பி-யுமான ராயிஸ் நேற்று சாடினார்.
அன்றிரவு ஹான்சியாங் கல்லூரியில் ஏற்பாட்டாளர்கள் தேசிய மொழியில் ஒரு வார்த்தை கூடப் பயன்படுத்தவில்லை என்பதால் அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவைப் போன்று தாமும் பொய் சொல்வதாக லிம் கூறுவதற்குக் காரணமே இல்லை என ராயிஸ் குறிப்பிட்டார்.
ஆனால் ஹான் சியாங் நிகழ்வை பினாங்கு அரசாங்க நிகழ்வு என ராயிஸ் தவறாகக் கருதுவதாகவும் அது தனியார் கல்லூரி ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்வு என்றும் லிம் அதற்குப் பதில் அளித்தார்.