கிறிஸ்துவர்கள் இறைவனுக்கு ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என பாஸ் கட்சியின் கீழ் நிலை அதிகாரி ஒருவர் கூறியதை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மறுத்துள்ளது குறித்து கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் நிம்மதி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு அரசாங்கத்தை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கிறிஸ்துமஸ் செய்தியில் கேட்டுக் கொண்டது தொடர்பில் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் சொல்லிய கருத்துக்கள் அதிர்ச்சியளிக்கின்றன என்றும் காரணம் அவை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பக்காத்தான் ராக்யாட் எடுத்த இணக்கத்திற்கு முரணாக அமைந்துள்ளது என்றும் ஆயர் தான் சொன்னார்.
“மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட நிலை குறித்த சாபு-வின் வாக்குறுதி இன்னும் உறுதியாக இருப்பது நிம்மதி அளிக்கிறது,” என மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.
துவான் இப்ராஹிம் சொன்னதை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகக் கருதப்படும் விளக்கத்தை பாஸ் துணைத் தலைவர் தந்துள்ளதாக செய்திகள் வெளியான பின்னர் ஆயர் தான் மலேசியாகினியிடம் பேசினார்.
‘அல்லாஹ்’ என்னும் சொல் முஸ்லிம்களுக்கு மட்டும் சிறப்புரிமை கொண்டதல்ல என 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் அதன் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டும் கூறிய போது அந்த சொல் மீது எழுந்துள்ள சர்ச்சைக்குத் தீர்வு காண்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தீவகற்ப மலேசியாவில் உள்ள கிறிஸ்துவர்கள் கருதியதாக மலாக்கா ஜோகூர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவருமான அவர் சொன்னார்.
“இஸ்லாத்துக்கு முந்திய காலத்திலிருந்தே அந்த சொல்லை கிறிஸ்துவர்கள் பயன்படுத்தி வந்துள்ளதற்கான வரலாற்று ஆதாரங்களை யாரும் மாற்ற முடியாது.”
அத்துடன் கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டு மலாய் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட பைபிள்களில் இறைவனைக் (God) குறிப்பதற்கு ‘அல்லாஹ்’ சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் அந்த கத்தோலிக்க ஆயர் சுட்டிக் காட்டினார்.
“17வது நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சு மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட பாஹாசா பைபிள் என்னிடம் உள்ளது. அது இறைவனைக் (God) குறிப்பதற்கு ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தியுள்ளது,” என அவர் மேலும் சொன்னார்.
விலக்கு நிலைத்திருக்க முடியாது
அந்த சொல் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல என்பதற்கு அந்த ஆதாரங்கள் போதுமானவை அல்ல என்றால் அரபுக்களை பெரும்பான்மையாகக் கொண்ட முஸ்லிம் நாடுகளும் அரபு அல்லாத மற்ற முஸ்லிம் நாடுகளும் தங்களுடைய கிறிஸ்துவக் குடிமக்கள் அந்த சொல்லைப் பயன்படுத்துவதற்கு ஏன் தடை விதிக்கவில்லை என ஆயர் தான் வினவினார்.
அந்த நடைமுறையிலிருந்து தீவகற்ப மலேசியாவுக்கு விலக்கு அளிப்பது நிலைத்திருக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.
கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை அனுமதிக்கலாம் என பக்காத்தான் அறிவித்த போது தீவகற்பத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் அதனை முன்னேற்றகரமான நடவடிக்கை எனக் கருதினர்.
“எனவே அந்த சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என பாஸ் கீழ் நிலை அதிகாரிகள் கூறிய கருத்துக்கள் பின்னோக்கிச் செல்வதைக் காட்டிய போது நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்,” என ஆயர் தான் சொன்னார்.
“மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட நிலை இன்னும் உறுதியாக இருப்பதாக பாஸ் துணைத் தலைவர் அளித்துள்ள வாக்குறுதி நிம்மதி அளித்துள்ளது. அவரது நிலையான சிந்தனைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அவருடைய துணிச்சலைப் பாராட்டுகிறோம். உண்மையான நல்லெண்ண நண்பராக நாங்கள் அவரை வரவேற்கிறோம்.”