வாக்காளர்களாக பதிந்து கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளும் ‘வாக்களியுங்கள்- Undilah-‘ என்ற வீடியோவை குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா பாராட்டியுள்ளார்.
அந்த வீடியோ ஒளிபரப்பப்படுவதைத் தடை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அவர் கேலி செய்தார்.
“அவர்கள் தடை செய்ய விரும்பினால் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அவர்கள் தடை செய்ய முடியும். அவர்கள் எல்லாவற்றையும் தடை செய்ய முடியும்,” என ரசாலி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
4 நிமிடங்கள் 38 வினாடிகளுக்கு ஒடும் அந்த வீடியோவில் திறப்புரையை ரசாலி வழங்கியுள்ளார். அந்த வீடியோ குறித்து அவருடைய கருத்துக்களை வினவிய போது “நன்றாக இருந்தது” என அவர் பதில் அளித்தார்.
அந்த வீடியோ தயாரிப்பாளர்கள் என்னைப் பேட்டி எடுத்த போது அதில் யார் இடம் பெறப் போகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது என அவர் விளக்கினார்.
“வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளுமாறு மக்களைக் குறிப்பாக இளைஞர்களையும் மலாய்க்காரர்களையும் கேட்டுக் கொள்ளும் ஒர் அறிக்கையை வழங்குமாறு என்னிடம் கூறப்பட்டது. சீனர்கள் பெரும் எண்ணிக்கையில் பதிவு செய்வதால் அந்த அழைப்பை விடுக்க நான் ஒப்புக் கொண்டேன்,” என்றார் அவர்.
அந்த ‘வாக்களியுங்கள்- Undilah-‘ வீடியோ ஒரு பொதுச் சேவை அறிவிப்பாகும். அதனை பாடகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பீட் தியோ உருவாக்கியுள்ளார்.
நாட்டின் முக்கிய ஒளிபரப்பு நிலையங்களில் அது ஒளிபரப்பப்படுவதிலிருந்து அண்மையில் மீட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்த வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என்ற அரசாங்க உத்தரவுக்கு பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஆரோக்கியமற்ற “மறைமுகமான செய்திகள்” காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
திரைப்படத் தணிக்கை வாரியத்தின் ஒப்புதல் இல்லாததால் அதனை ஒளிபரப்பக் கூடாது என மலேசிய பல்லூடக, தொடர்பு ஆணையம் கூறியது.
அரசாங்கம் எல்லாவற்றையும் சந்தேகக் கண்களோடு பார்ப்பதால் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறது என எதிர்ப்பாளர்கள் வாதாடுகின்றனர்.
பல புகழ் பெற்ற கலைஞர்கள், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் ஆகியோருடன் ரசாலி கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் போன்ற பல பிஎன் தலைவர்களும் அந்த வீடியோவில் தோன்றியுள்ளனர்.