2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு உதவிகள் ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடையில் கொடுக்கப்படும் என இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா தெரிவித்துள்ளார்.
அதில் ஒரே மலேசியா மக்கள் உதவி 2.0 (BR1M 2.0), பள்ளிச் செலவுகளுக்கான சிறப்பு உதவி, ஒரே மலேசியா புத்தக பற்றுச் சீட்டு, ஓய்வூதியம் பெறாத முன்னாள் இராணுவ வீரர்களுக்கான ஒரே மலேசியா உதவி (SVTB1M) ஆகியவை அவற்றுள் அடங்கும் என்றார் அவர்.
“ஜனவரி மாதம் நாங்கள் நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் செலவுகள் மீது கவனம் செலுத்துவோம். BR1M 2.0 பிப்ரவரி மாதம் கொடுக்கப்படும். ”
“அடுத்து நாங்கள் ஓய்வூதியம் பெறாத முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஆயிரம் ரிங்கிட்டை கொடுப்போம். அதற்கு முன்னாள் இராணுவ வீரர் சங்கம் வழியாக தற்காப்பு அமைச்சு ஏற்பாடு செய்யும்,” என அகமட் ஹுஸ்னி நேற்று ஈப்போவில் நிருபர்களிடம் கூறினார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆறாம் படிவ மாணவர்களுக்குமான ஒரே மலேசியா புத்தகப் பற்றுச்சீட்டு விநியோகம் மார்ச் மாதம் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
என்றாலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னரும் சில அன்பளிப்புக்கள் கொடுக்கப்படலாம் என்று அகமட் ஹுஸ்னி குறிப்பிட்டார்.
“மார்ச் மாதம் அன்பளிப்புக்களை விநியோகம் செய்வதற்கான இறுதித் தேதி அல்ல. எடுத்துக்காட்டுக்கு BR1M 2.0க்கு விண்ணப்பங்கள் தாமதமாக கொடுக்கப்படும் போது அதனை வழங்குவதும் தாமதமாகலாம்.”
“பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் ஜனவரி மாதம் சேருவதால் ஒவ்வொரு பள்ளியிலும் அப்போது உதவித் தொகை மாணவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.”
“மார்ச் மாதம் பல்கலைக்கழகங்கள் தொடங்குகின்றன. அதனால் அப்போது மாணவர்களுக்கு உதவித் தொகைகளை விநியோகிக்க முடியும்,” என அகமட் ஹுஸ்னி மேலும் தெரிவித்தார்.