செபாராங் பிராய் தெங்கா-வுக்கு புதிய மாவட்ட அதிகாரி நியமனம்

DOஜுஸ்னி இஸ்மாயில் செபாராங் பிராய் தெங்கா-வுக்கு புதிய மாவட்ட அதிகாரியாக இன்று தொடக்கம்  நியமிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

காமத் துன்புறுத்தல் விவகாரத்தை மூடி மறைத்ததாகக் கூறப்படுவதின் தொடர்பில் ஜனவரி மூன்றாம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்த ரோஸ்லான் யாஹ்யாவுக்குப் பதில் அந்த பொறுப்பை ஜுஸ்னி ஏற்றுக் கொண்டுள்ளார்.

ரோஸ்லான் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் போலீஸ் ஜாமீனில் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜுஸ்னியிடம் பதவி ஒப்படைக்கப்படும் சடங்கை மாநிலச் செயலாளர் பேரிஸான் டாருஸும் பார்வையிட்டார்.

“எல்லாம் வழக்கம் போல நடைபெறுகிறது,” என இன்று நிருபர்களிடம் கூறிய லிம், மாநில அரசாங்கம் ஊழலை ‘கிஞ்சித்தும் ஏற்றுக் கொள்ளாது’ என்றார்.

“அந்த நிகழ்வு பினாங்கு நிர்வாகத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது ஊழல் வழக்கு, தேவைப்படுமானால் நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்,” என்றார் லிம்.DO2

ஜுஸ்னி ஏற்கனவே செபாராங் பிராய் உத்தாரா அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ரோஸ்லான் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் வழக்குடன் மாநில அரசாங்கத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என வலியுறுத்திய லிம், மாநில அரசாங்கம் எப்போதும் ஊழலை எதிர்த்துப் போராடி வருவதாகச் சொன்னார்.

“எங்களுக்கு இந்த விசாரணை பற்றி ஊடகங்கள் மூலமாகத் தான் தெரிய வந்துள்ளது. எங்களுக்குக் கூடுதல் தகவல் கிடைத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் அந்த வழக்கை மறைக்க மாட்டோம்.”

எம்ஏசிசி வழக்கமாக விசாரிக்கப்படும் ஊழல் சம்பவங்களைப் பற்றி அதிகம் தகவல் வெளியிடுவதில்லை.  ஆனால் இந்த முறை அது தனது நடைமுறையை மாற்றிக் கொண்டதை பினாங்கு முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.

“எதிர்காலத்தில் அது தனது நடைமுறையை மாற்றிக் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அதனிடம் சமர்பித்துள்ள மூன்று புகார்களை அது கவனிக்கும் என நாங்கள் எண்ணுகிறோம். அவற்றில் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் எம்ஏசிசி அந்த புகார்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.’

எம்ஏசிசி ஜனவரி மூன்றாம் தேதி கைது செய்த துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மானுடைய உதவியாளருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லிம்-மிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் நியாயமாக நடந்து கொள்வது அவசியம் எனப் பதில் அளித்தார்.

“வரும் வியாழக் கிழமை மாநில ஆட்சி மன்றம் கூடுவதற்கு முன்னர் போதுமான தகவல்களைப் பெற இயலும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.

“மாநில அரசாங்கத்துடன் அவருக்கு பணி ஒப்பந்தம் இருந்தால் நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.”

சாவோடா நவாவி செபாராங் பிராய் உத்தாரா-வுக்கு புதிய மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் லிம் அப்போது அறிவித்தார்.

சாவோடா நவாவி அதே அலுவலகத்தில் துணை மாவட்ட அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நாட்டில் மாவட்ட அதிகாரி பதவிக்கு நியமிக்கப்படும் இரண்டாவது மாது அவர் ஆவார்.