“தீர்ப்பை திருடிய நீதிபதி” வழக்கு இருக்கிறது, முன்னாள் அமைச்சர் உறுதிப்படுத்தினார்

ஒரு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக தீர்ப்பை திருடியது பற்றி ஓர் அதிகாரப்பூர்வமான புகார் 2000 ஆண்டில் செய்யப்பட்டது என்பதை அப்போது சட்ட அமைச்சராக இருந்த ராயிஸ் யாத்திம் உறுதிப்படுத்தினார்.

“அன்றைக்கும் இன்றைக்கும் இடையில் நீண்ட காலம் கடந்து விட்டது. ஆனால், அவ்வழக்கு பற்றி எனக்குத் தெரியும்”, என்று தற்போது தகவல், தொலைத்தொடர்பு மற்றும் பண்பாட்டு அமைச்சராக இருக்கும் ரயிஸ் யாத்திம் இன்று அவ்வழக்கு பற்றி கேட்டபோது நாடாளுமன்றத்தில் கூறினார்.

“விசாரித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அவ்விவகாரம் தலைமை நீதிபதி யுசுப் சின்னிடம் அனுப்பப்பட்டது.”

யுசுப் டிசம்பர் 20, 2000இல் பதவி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் முகமட் ஸைட்டின் அப்துல்லா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தாம் 2004 ஆம் ஆண்டில் வேறொரு அமைச்சுக்கு மாற்றப்பட்டதால், அவ்விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் ரயிஸ் யாத்திம்.

மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது நீதித்துறையைப் பொறுத்தது என்று ரயிஸ் மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட நீதிபதி தற்போது மேல்முறையீட்டு நீதிபதியாக இருந்து வருகிறார். அவரை ஒரு விசாரணை மன்றத்தால் மட்டுமே பதவியிலிருந்து அகற்ற முடியும்.

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் இப்பிரச்னையை நேற்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங் இது சம்பந்தமான மனு ஒன்றை மக்களவை தலைவர் அலுவலகத்தில் தாக்கல் செய்ததின் மூலம் எழுப்பினார்.

சம்பந்தப்பட்ட நீதிபதியை விசாரணை மன்றத்தின் முன் நிறுத்தி அவரை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரும் அம்மனுவை 60 பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர்.