இயலாத நிலையில் இந்திராணி; உதவி செய்ய தலைவர்கள் முன்வருவார்களா?

indrani_hospital_pahangகடந்த சனிக்கிழமை (05.01.2013) ஜசெக தனது தேர்தல் பிரச்சார கனரக ஊர்தியில் காராக்கில் பிரச்சாரம் செய்தது. இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின்போது காராக் தாமன் மக்முர் என்ற வட்டாரத்தில் வசிக்கும் திருமதி இந்திராணி (வயது 39) என்ற பெண்மனி, தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை மிகவும் தைரியமாக மேடையில் பேசினார். அவர் தமிழ் மட்டும் அல்லாமல் மலாய் மற்றும் சீன மொழியிலும் பேசியது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.

காராக் தமிழ்ப்பள்ளியின் சிற்றுண்டிச் சலையில் உதவியாளராக பணி புரியும் இந்திராணி, தனது 10, 9 மற்றும் 6 வயது பெண் குழந்தைகளின் பள்ளிச் சீருடை செலவுகளுக்கு உதவி கோரி அவ்வட்டார சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திரனை அனுகிய போது அவர், “எனக்கும் 1500 வெள்ளிதான் சம்பளம் இதில் எத்தனைப் பேருக்கு பணம் தருவது, உங்கள் கணவரின் சம்பளத்தில் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த தெரியாதா?” என்று திட்டி திருப்பியனுப்பியுள்ளார்.

indrani_pahangஇந்த நிகழ்வின்போது திருமதி காமாட்சி துரைராஜூ தனது சேவை மையத்திற்கு ஆதரவாளர்கள் கொடுத்த நன்கொடையிலிருந்து ஒரு சிறு தொகையை உதவியாக இந்திரானிக்கு கொடுத்து உதவினார்.

இதேவேளை, இந்த நிகழ்வு நடைபெற்று முடிந்து இரண்டு நாட்களின் பின்னர் (07.01.2013), எப்போதும்போல், தனது சிற்றுண்டிச் சாலைக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு தனது மோட்டார் வண்டியில் சாலை கடக்க காத்திருந்த சமயத்தில், வலது பக்கத்திலிருந்து வந்த வாகனம் ஒன்று இந்திராணியை பலமாக இடித்து தள்ளியது.

மோசமான காயங்களுடன் பகாங் டெமெர்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணிக்கு, வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதுடன் கை, கால், முகத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் பரிதாபமான நிலையில் உள்ளார்.

காலை 6.30 மணிக்கு நடந்த இந்த விபத்துச் செய்தி பற்றி அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த ஜசெக தேசிய மகளிர் அணியின் துணைச் செயளாலர் காமாட்சி, இந்திராணியின் நிலை குறித்து மருத்துவரிடம் விசாரித்ததில், இந்திராணிக்கு இனிப்பு நீர் வியாதி இருப்பதுடன் அவருக்கு இரத்தமும் மிகவும் குறைந்த நிலையில் உள்ளதால், உடனடியாக காலில் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.

எனினும், அவருக்கு மேலதிகமாக இரத்தம் செலுத்தப்பட்ட நிலையில், நேற்று அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திராணி முழுமையாக குணம் அடைவதற்கு இன்னும் 8 மாதங்கள் வரை ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அதுவரை அவர் வேலைக்குச் செல்ல முடியாது; தனது பிள்ளைகளையும் பராமரிக்க முடியாது சூழ்நிலை உருவாகிவுள்ளது.

தமிழ்ப்பள்ளியில் பயிலும் மூன்று பிள்ளைகளையும் இந்திராணியே பள்ளிக்கு அழைச் செல்லுவதால், பிள்ளைகளை தற்போது பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறிய காமாட்சி, அவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்காக பள்ளி பேருந்து ஒன்றிடம் பேசிவருவதாக கூறினார்.

மெக்கானிக்காக பணிபுரியும் தனது கணவரின் வருமானம், வீட்டு வாடகை மற்றும் ஏற்கனவே ஏற்பட்ட கடன்களை அடைப்பதற்கே பற்றவில்லை. அவரும் தற்போது மருத்துவமனையிலிருந்து மனைவியை பார்த்துக்கொள்வதால் பணிக்கும் செல்ல முடியவில்லை என தெரியவருகிறது.

மேலும், அறுவை சிகிச்சைக்கான பணத்தையும் செலுத்த வேண்டிய நிலையை இந்திராணியின் குடும்பம் எதிர்நோக்கியுள்ளது.

தனது குடும்பத்தின் பரிதாப  நிலையை நினைத்து மிகவும் வருத்தப்பட்ட நிலையில் இந்திராணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கான உதவிகளை முடிந்த வரை செய்வுள்ளதாக செம்பருத்தி இணையத்தளத்திடம் கூறிய காமாட்சி, இந்திராணியின் நிலை உணர்ந்து சமூக நல இலாகா உடனடி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில், அவரது குடும்பத்திற்கு சமூக நல இலாகாவிடம் உதவிகேட்டு விண்ணப்பம் செய்யப் போவதாகவும் கூறினார்.

சாமி மேடைக்கும் மாட்டுப் பண்னைக்கும் போராட்டங்கள் நடத்தும் அரசியல்வாதிகளும், அரசாங்கத்தை அறிக்கை வழி தொடர்ந்து வசைபாடும் அரசியல்வாதிகளும் இதுபோன்ற ஏழைகளின் பிரச்னைகளில் அரசியல் வேறுபாடுகளை களைந்து உதவ முன்வரவேண்டும். முன்வருவார்களா? பொறுத்திருந்துதான் பார்ப்போம்….

இந்திராணிக்கு உதவ விரும்புவர்கள் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் : 016-9803894

TAGS: