‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு எல்லா மலேசியர்களுக்கும் அரசமைப்பு உரிமை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்குமாறு அனைத்து மலேசியர்களையும் மசீச கேட்டுக் கொண்டுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நீதிபதி லாவ் பீ லான் வழங்கிய அந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டிய மசீச பிரச்சாரப் பிரிவுத் துணைத் தலைவர் லாவ் செங் கோக், அந்த சொல் முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பதே அந்தத் தீர்ப்பின் அர்த்தம் என்றார்.
“கூட்டரசு அரசமைப்பின் 11(4)வது பிரிவுக்கு இணங்க வழங்கப்பட்ட அந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எல்லாத் தரப்புக்களும் மதிக்க வேண்டும்.”
“சமய நோக்கங்களுக்காக முஸ்லிம் அல்லாதவர்கள் அந்த வார்த்தையை முஸ்லிம் அல்லாதாரிடம் பயன்படுத்துவது குற்றமல்ல. உள்துறை அமைச்சு அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்து கொண்டுள்ளது,” என அவர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
பைபிள் பாஹாசா மலேசியா பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கிறிஸ்துமஸ் செய்தியில் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அந்த விஷயம் மீதான சர்ச்சை மீண்டும் மூண்டது.
பைபிள் பாஹாசா மலேசியா பதிப்பு உட்பட உள்நாட்டில் அச்சிடப்படுவதற்கும் இறக்குமதி செய்யப்படுவதற்கும் அனுமதி அளித்த 10 அம்சத் தீர்வை 2011 ஏப்ரல் 2ம் தேதி கூட்டரசு அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளதாக லாவ் சொன்னார்.
“ஆகவே எல்லாத் தரப்புக்களும் ‘அல்லாஹ்’ சொல்லை அரசியலாக்குவதை நிறுத்திக் கொண்டு அல்லாஹ் என்ற சொல் மீது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குக் கட்டுப்படுவதோடு 10 அம்சத் தீர்வையும் அங்கீகரிக்க வேண்டும்.”
“அந்தப் பிரச்னை மீது விவாதங்கள் தொடருவது எந்தத் தரப்புக்கு நன்மை அளிக்கப் போவதில்லை. ஆனால் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் நாட்டை தனித்தனியாக நிற்கச் செய்து விடும்.”
சரவாக் தேர்தலின் போது சமர்பிக்கப்பட்ட அந்த 10 அம்சத் தீர்வு கிழக்கு மலேசியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பைபிளின் பாஹாசா மலேசியா பதிப்பு மீதான கிட்டத்தட்ட எல்லாக் கட்டுப்பாடுகளையும் அகற்றுகிறது.
அந்த 10 அம்சத் தீர்வை மலேசிய தேவாலய மன்ற இளைஞர் பிரிவு நிராகரித்த போதிலும் நீண்ட காலமாக தொடரும் ஒரு பிரச்னையை தணிப்பதற்கு உதவியது.
இதனிடையே ‘அல்லாஹ்’ என்ற சொல்லை கிறிஸ்துவர்கள் பயன்படுத்துவது பற்றி மட்டுமே டிஏபி கவனம் செலுத்தியுள்ளதாகவும் இந்துக்களும் சீக்கியர்களும் ஒராங் அஸ்லி மக்களும் பாபா நோன்யா மக்களும் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதை அங்கீகரிக்க டிஏபி தவறி விட்டதாகவும் லாவ் குறை கூறினார்.