போலீஸ் நேர்மாற்றம்: புக்கிட் ஜலீல் அரங்கை பயன்படுத்துங்கள்

mohamedசனிக்கிழமை மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள் பிக்கிட் ஜலீல் தேசிய அரங்கத்தைப்பயன்படுத்த வேண்டும் என போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று மாலை வெளியிட்ட பத்திரிக்கைக் குறிப்பு ஒன்றில் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலே அதனைத் தெரிவித்தார்.

ஏற்பாட்டாளர்கள் ஒரு மில்லியன் பேர் கலந்து கொள்வர் என இலக்கு வைத்திருப்பதால் அந்த எண்ணிக்கையிலான மக்களை மெர்தேக்கா அரங்கம் சமாளிக்க முடியாது என அவர் சொன்னார்.

மெர்தேக்கா அரங்கத்தில் 30,000 பேர் மட்டுமே அமர முடியும் எனக் கூறிய முகமட், பங்கேற்பாளர்  எண்ணிக்கை அந்த அளவுக்கு மேல் போகக் கூடாது என மெர்தேக்கா நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனையை அவர் சுட்டிக் காட்டினார்.

“ஒரு மில்லியன் பங்கேற்பாளர்கள் என ஏற்பாட்டாளர்கள் இலக்கு வைத்திருப்பதால் அந்தப் பேரணியை புக்கிட்  ஜலில் தேசிய அரங்கில் நடத்துவதே நியாயமானது.”

“அந்த இடம் மிகவும் பொருத்தமானது, சௌகரியமானது. காரணம் அங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள்  அமர முடியும். எல்ஆர்டி உட்பட பொதுப் போக்குவரத்து வசதிகளும் உண்டு. அந்த இடம் பாதுகாப்புத் தேவைகளையும் அது பூர்த்தி செய்யும்.

ஆனால் புக்கிட் ஜலீல் அரங்கில் எத்தனை பேர் அமர முடியும் என்பதை முகமட் தெரிவிக்கவில்லை.  அங்கு 100,000 பேர் அமர முடியும்.

தெரு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புக்கிட் ஜலில் தேசிய அரங்கத்தை பயன்படுத்துவதற்கும் அதற்குப் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து மெர்தேக்கா அரங்கத்தைப் பயன்படுத்துவதற்கும் ஏற்பாட்டாளர்கள் விண்ணப்பித்துக் கொண்டதாக தமக்கு தகவல் கொடுக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.mohamed1

அந்த இரு அரங்கங்களும் விண்ணப்பத்தை அங்கீகரித்துள்ளன.

“பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்வது உட்பட பேரணி அமைதியாக நிகழ்வதை உறுதி செய்வதற்கு ஏற்பாட்டாளர்களே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்,” என்றும் முகமட் கூறினார்.

புக்கிட் ஜலீல் அரங்கம் பொருத்தமான இடமாக இருக்கும் என்றும் ஆனால் அதனை ஏற்பாட்டாளர்கள் நிராகரித்து விட்டனர் என்றும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நேற்று கூறியிருந்தார்.

இதனிடையே போலீஸ் தெரு ஆர்ப்பாட்டங்களையும் குழந்தைகள் பங்கு கொள்வதையும் அனுமதிக்காது என்றும் முகமட் தெரிவித்தார்.

“அந்தப் பேரணிக்கான இடம் அரங்கமே தவிர வேறு எந்த இடமும் ஒன்று கூடும் இடங்களாகப் பயன்படுத்தப்படக் கூடாது.”

“டாத்தாரான் மெர்தேக்காவில் எந்த ஒரு கூட்டமும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.

பேரணி பங்கேற்பாளர்கள் ஒன்று கூடி மெர்தேக்கா அரங்கத்துக்கு ஊர்வலமாகச் செல்வதற்கு ஏற்பாட்டாளர்கள் ஏழு இடங்களை  அறிவித்துள்ள வேளையில் முகமட்டின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. .