மாணவர்களுக்கான 100 ரிங்கிட் ரொக்கத் தொகையை வழங்குவதற்கு பிஎன் தலைவர்களை அழைக்குமாறு ஜோகூரில் உள்ள சில பள்ளிக்கூடங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அந்த நிகழ்வை விளம்பரப்படுத்துவதற்கு பதாதைகளை வைக்குமாறும் அவற்றுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு, பல்வேறு ஜோகூர் மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றின் இணையத் தளங்களில் அந்த உத்தரவுகள் காணப்படுகின்றன.
“தேர்ந்தெடுக்கப்பட்ட பிஎன் பேராளர் அல்லது அவரது பேராளர்” 100 ரிங்கிட் விநியோக நிகழ்வில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் கோத்தா திங்கி மாவட்ட கல்வி அலுவலக இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளுவாங் மாவட்ட கல்வி அலுவலக இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள கல்வி அமைச்சு தலைமைச் செயலாளர் ரோஸ்லி முகமட் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி எழுதிய கடிதம் ஒன்றிலும் அவ்வாறு கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
“Bantuan Khas Awal Persekolahan விநியோகம் அரசாங்கம் மக்களுடைய உணர்வுகளைத் தொடும் அம்சம்.”
“ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் அல்லது கூட்டரசு அரசாங்கத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் மாணவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் உதவித் தொகையைக் கொடுக்கும் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என அந்தக் கல்வி அமைச்சின் கடிதம் குறிப்பிட்டது.
மாநில கல்வி இயக்குநர்கள் உட்பட கல்வி அமைச்சில் உள்ள எல்லா இயக்குநர்களுக்கும் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் பதாதைகள்
டிசம்பர் 31ம் தேதி ரோஸ்லி கையெழுத்திட்ட இன்னொரு கடிதமும் ஜோகூர் பாரு மாவட்ட கல்வி அலுவலக இணையத் தளத்தில் காணப்படுகின்றது.
அதில் ‘அழைக்கப்படக் கூடிய தேர்த்நெடுக்கப்பட்ட பேராளர்கள் அல்லது கூட்டரசு அரசாங்கத் தலைவர்கள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அல்லது துணை அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் அல்லது உள்ளூர் தலைவர்கள்
இதனிடையே பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாதைகளை தயாரித்து அவற்றை அடுத்த பொதுத் தேர்தல் வரையில் காட்சிக்கு வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளும் உத்தரவு குளுவாங், கோத்தா திங்கி மாவட்ட அலவி அலுவலக இணையத் தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விளக்கக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பொந்தியான் பள்ளிக்கூடப் பேராளர் ஒருவர் அந்த விவரங்களை உறுதி செய்தார்.
“ஒவ்வொரு பள்ளியும் ஒரு பதாதையை அச்சிட வேண்டும். அதில் பிரதமர் (நஜிப் அப்துல் ரசாக்) படமும் கல்வி அமைச்சர் (முஹைன் யாசின்) படமும் இருக்க வேண்டும். ‘Janji Ditepati’ என்ற சொற்றொடரும் பதாதையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
“அந்தப் பதாதை தேர்தல் முடியும் வரை காட்சிக்கு வைக்கப்பட வேண்டும்,” என பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்தப் பேராளர் சொன்னார்.
மாணவர்களுக்கான நிதி உதவி 2013 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதனால் முதல் வகுப்பு தொடக்கம் ஐந்தாம் படிவம் வரையிலான 5.4 மில்லியன் மாணவர்கள் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.