பெர்சே 2.0 பேரணி மீது வீசப்பட்ட 262 கண்ணீர் புகைக் குண்டுகள், அமைதியாக நடந்த ஒர் ஊர்வலத்தை சமாளிப்பதற்கு தேவைப்படும் உண்மையான பலத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிகம் என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறுகிறார்.
“அந்தப் பேரணி மிக அமைதியாக நடைபெற்றது என்பதைக் காட்டுவதற்கு மறுக்க முடியாத வீடியோ, பட ஆதாரங்கள் உள்ளன”, என்றார் அவர்.
பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகள் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, பேரணியில் பங்கு கொண்டவர்களைத் தண்டிக்கவும் அச்சுறுத்தவும் கண்மூடித்தனமாக அவை பாய்ச்சப்பட்டதைக் காட்டுகிறது என மனித உரிமைப் போராளியுமான சுரேந்திரன் சொன்னார்.
கூட்டரசு அரசியலமைப்பின் 10வது பிரிவுக்கு ஏற்ப ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தை பங்கேற்பாளர்கள் பயன்படுத்தியுள்ள வேளையில் அது அவசியமற்றது என அவர் குறிப்பிட்டார்.
பெர்சே 2.0ஐ சீர்குலைக்க கூட்டரசு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுடன் பிஎன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் போலீசாரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்றும் சுரேந்திரன் சொன்னார்.
“அந்தப் பேரணி தோல்வியில் முடிவதை உறுதி செய்வதற்கும் தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே இயக்கத்தை அழிப்பதற்கும் போலீஸ் பயன்படுத்தப்பட்டது.”
“ஆளும் பின் கூட்டணியின் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசு அதிகாரங்கள் அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டன”, என்றார் அவர்.
போலீசாருக்கு ஆத்திரத்தை மூட்டவில்லை
“கண்மூடித்தனமாகவும் சட்டவிரோதமாகவும் ” கண்ணீர் புகைக் குண்டுகள் பாய்ச்சப்பட்டதற்கு நல்ல எடுத்துக் காட்டு கேஎல் சென்ட்ரலில் போலீசார் நடந்து கொண்ட விதமாகும் என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டார்.
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் காலித் சாமாட் உட்பட பல எதிர்தரப்பு அரசியல்வாதிகளும் சிவில் சமூகப் பிரமுகர்களும் காயமடைந்தனர்.
போலீசாருக்கு ஆத்திரமூட்டப்படாத வேளையில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதற்கு ஆதாரம் இருப்பதாக சுரேந்திரன் சொன்னார்.
“சுரங்கப் பாதையில் நின்று கொண்டிருந்த கூட்டத்தினர் மீது டஜன் கணக்கான கண்ணீர் புகைக் குண்டுகள் பாய்ச்சப்பட்டன. அதனால் புகை மூட்டம் அதிகரித்தது. அமைதியாக ஊர்வலம் நடத்திய மக்கள் கிட்டத்தட்ட மூச்சுத் திணறல் ஏற்பட்டது.”
“அவ்வாறு கண்ணீர் புகைக் குண்டுகளை பாய்ச்சுமாறு உத்தரவிட்ட பிரிக்பீல்ட்ஸ் ஒசிபிடி வான் அப்துல் பேரி மீதோ அல்லது சம்பந்தப்பட்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”
அவை தொடர்பில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும் பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் தேசிய போலீஸ் படைத் தலைவரும் உள்துறை அமைச்சரும் மௌனமாக இருக்கின்றனர்”, என்றார் அவர்.
சட்டத்துறைத் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சுரேந்திரன் வலியுறுத்தினார்.