கோலாலம்பூரில் சனிக் கிழமை நடைபெற்ற மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மலேசியர்கள் குழு ஒன்று லண்டன் மாநகரச் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றது.
“அவர்கள் கொடிகளையும் தோரணங்களையும் ஏந்தியிருந்தனர். தூய்மையான தேர்தல்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் சுலோகத்தையும் முழங்கினர். தேர்தலுக்காக வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றும் குடிமக்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களாக பணியாற்றுவதற்கு உதவுமாறும் கேட்டுக் கொள்ளும் பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய உரையும் வாசிக்கப்பட்டது,” என சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் கூறியது.
மெர்தேக்கா அரங்கத்தில் நிகழ்ந்த பேரணியால் தூண்டப்பட்ட அந்த மலேசியர்கள் டிராபல்கார் சதுக்கத்திலிருந்து டவுனிங் ஸ்டீரிட்டுக்கும் அடுத்து வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கும் ஊர்வலமாக சென்றனர்.
அந்தக் குழுவைத் தொடர்ந்த போலீஸ்காரர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அவர்கள் உதவினர்.
மலேசியாவில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த ‘ஹிம்புனானுக்கு’ வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள் குறிப்பாக லண்டனிலும் ஜோர்டானிலும் வாழ்கின்றவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு பெர்சே 3.0 பேரணிக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த முறை வெளிநாட்டு மலேசியர்கள் ஆதரவு மிகவும் குறைவாகும்.