2009ம் ஆண்டு மசீச-வுக்குச் சொந்தமான தி ஸ்டார் நாளேட்டுக்கு எதிராகத் தாம் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கை மீட்டுக் கொள்ள முதுநிலை வழக்குரைஞரான ரோஸ்லி டாஹ்லான் இன்று ஒப்புக் ண்டுள்ளார்.
2007ம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு முதல் நாளன்று ரோஸ்லி கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது சம்பந்தப்பட்டது அந்த அவதூறு வழக்காகும்.
ரோஸ்லி வழக்கை மீட்டுக் கொள்வதற்கு ஈடாக தி ஸ்டார் மன்னிப்புக் கோரும் செய்தியை நாளை வெளியிடும்.
அத்துடன் செலவுத் தொகையையும் ரோஸ்லி தேர்வு செய்யும் மூன்று அமைப்புக்களுக்கு நன்கொடைகளையும் அந்த ஏடு வழங்கும்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஹாஸ்னா ஹஷிம் முன்னிலையில் அந்தத் தீர்வு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கு இன்று நீதிபதி ஹியூ சியூ கெங் முன்னிலையில் விசாரணைக்கு வருவதற்கு தேதி குறிக்கப்பட்டிருந்தது.
ரோஸ்லிக்குச் செலவுத் தொகைகளைக் கொடுக்குமாறு நீதிபதி ஹாஸ்னா தி ஸ்டாருக்கு ஆணையிட்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமது Lee, Hishammuddin Allen and Gledhill நிறுவனத்திலிருந்து ஊழல் தடுப்பு நிறுவனம் தம்மை கைது செய்து அவமானப்படுத்திய பின்னர் தமது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியே தி ஸ்டார் நாளேட்டுக்கு எதிரான வழக்கு என ரோஸ்லி கூறினார்.
அந்த நேரத்தில் பல நாளேடுகள் தம்மைப் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்டதாகக் கூறிக் கொண்ட அவர், அதன் விளைவாக Copgate ஊழல் என்ற விஷயம் தலைதூக்கியதாகச் சொன்னார்.
அதனைத் தொடர்ந்து தமது சொத்துக்களை அறிவிக்குமாறு ஊழல் தடுப்பு நிறுவனம் வெளியிட்ட ஆணையைத் தாம் பின்பற்றவில்லை என தமக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டது என்றும் ரோஸ்லி தெரிவித்தார்.
2011ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்
2007ம் ஆண்டு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தமது தோற்றத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு தாம் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோஸ்லி நீதிமன்றத்தில் கூறினார்.
2011ம் ஆண்டு அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதனை எதிர்த்து முறையீடு செய்து கொண்ட சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் கடந்த ஆண்டு அதனை மீட்டுக் கொண்டது.
தாம் விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக ஊழல் தடுப்பு நிறுவனத்துக்குப் பதில் அமைக்கப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், உத்துசான் மலேசியா, நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், தி ஸ்டார் ஆகியவற்றுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
உத்துசான் மலேசியா அவர் குறித்த செய்திகளுக்காக ஏற்கனவே பொது மன்னிப்பைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் அம்னோவுக்குச் சொந்தமான அந்த ஏட்டுக்கு எதிராகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்கைத் தொடருவதற்கு ரோஸ்லி திட்டமிட்டுள்ளார்.