பெர்ஜெயா அரசாங்கம் சபாவில் 73,000 பிலிப்பினோக்களை குடியேற்றியது

sabah1970ம் ஆண்டுக்கும் 1984ம் ஆண்டுக்கும் இடையில் சபா மாநில அரசாங்கம் அந்த மாநிலத்தில் பிலிப்பினோவைச் சேர்ந்த 73,000 அகதிகள் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதி அளித்தது. இவ்வாறு சபாவில் குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் துறையில் உள்ள குடியேற்றப் பிரிவுத் தலைவர் அப்துல் ஜபார் அலிப் அந்தத் தகவலை வெளியிட்டார்.

“அவ்வாறு குடியமர்த்தப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று அகதி, முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதாகும்.”

அந்த அகதி மேற்கு மிண்டானோ அல்லது ஸாம்போவாங்கா தீவகற்பம் என்று அறியப்படும் பிலிப்பீன்ஸின் 9வது வட்டாரத்தைச் சேர்ந்தவராகவும் அங்கு நிகழும் பூசலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்பது மற்ற நிபந்தனைகளாகும். அத்துடன் சபாவில் நிரந்தரமாக தங்கும் நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

“இடம் பெயர்ந்த மனிதர் என்ற தகுதியைப் பெறுவதற்கு அதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.”sabah1

“இடம் பெயர்ந்த மக்கள் என நாங்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவர்களையும் ஏற்றுக் கொண்டோம்,” என கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றத்தில் நிகழும் விசாரணையில் அப்துல் ஜபார் சொன்னார்.

1984 முதல் 2008 வரை குடியேற்றப் பிரிவுக்கு தலைமை தாங்கிய அவர், சபாவில் ஐந்து அகதிகள் குடியேற்றப்பகுதிகள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அந்த விசாரணையில் சாட்சியமளித்துள்ள மூன்றாவது நபர் அப்துல் ஜபார் ஆவார்.

குடியமர்த்தப்பட்டவர்களுக்கு குடியேற்ற அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அந்த அடையாளக் கார்டுகளைத் தேசியப் பதிவுத் துறை அங்கீகரிக்கவில்லை என்றும் அது முதலமைச்சர் அலுவலக பதிவேட்டுக்காக மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு குடியமர்த்தப்பட்ட மக்களுடைய படங்கள் உட்பட எல்லா விவரங்களும் பதிவேட்டில் இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

1985ல் அந்த நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டதாக அப்துல் ஜபார் குறிப்பிட்டார். அந்தச் சமயத்தில் மாநில அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது.

மாநிலத்தில் உள்ள சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை கணக்கெடுக்கும் பொறுப்பு தமது பிரிவுக்கு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“நாங்கள் முதல் கட்டத்தில் அந்நியர்கள் வசிப்பதாகக் கருதப்படும் வீடுகளுக்குச் சென்று கணக்கெடுத்தோம். இரண்டாவது கட்டத்தில் அவர்களைப் பதிவு செய்தோம். அதற்குப் பின்னர் தற்காலிகப் பதிவு கார்டு என்னும் ஒர் ஆவணம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதிலும் தேசியப் பதிவுத் துறை சம்பந்தப்படவில்லை.”

அந்த அரச விசாரணை ஆணையத்துக்கு முன்னாள் சபா, சரவாக் தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம் லிப் கியோங் தலைவராக இருக்கிறார்.

இதர பல விஷயங்களுடன் சபாவில் மக்கள் தொகை வெகு வேகமாக உயர்ந்ததற்கான காரணத்தை கண்டறிவது அந்த ஆணையத்தின் பணிகளில் ஒன்றாகும்.