சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் பெரும்பாலும் நெகிரி செம்பிலான் சட்ட மன்ற தவணைக் காலம் நிறைவடையும் மார்ச் 27க்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என டிஏபி ஆரூடம் கூறியுள்ளது.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர்ப்பார் என அந்தக் கட்சியின் வியூகவாதியான லியூ சின் தொங் கூறினார்.
என்றாலும் நெகிரி செம்பிலான் சட்ட மன்ற தவணைக் காலம் முடிந்ததும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றார் அவர்.
“பிப்ரவரி 25க்கும் மார்ச் 27க்கும் இடையில் கூட்டரசு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என நான் கருதுகிறேன்.”
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கான இறுதி நாள் பிப்ரவரி 24 ஆகும். அதனால் பிப்ரவரி 25 என நான் சொல்கிறேன்.”
2008ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி (சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஏழாவது நாள்) நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பிஎன் உறுப்புக் கட்சிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக புக்கிட் பெண்டேரா எம்பி-யுமான அவர் தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
லியூ-வின் ஆரூடம் பெரும்பாலும் சரியாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.
“நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு இறுதி நாள் ஏப்ரல் 28. நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான இறுதி நாள் மார்ச் 27. ஆகவே….” என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் டிவிட்டரில் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இதனிடையே பிஎன் தேர்தல் எந்திரம் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நடவடிக்கை அறையை பிப்ரவரி முதல் தேதிக்குள் திறக்கும் என நேற்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் கூறினார்.
2013 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட எல்லா அன்பளிப்புக்களும் மார்ச் மாத முடிவதற்குள் வழங்கப்பட வேண்டும் என இரண்டாவது நிதி அமைச்சர் ஹுஸ்னி ஹானட்ஸ்லா தெரிவித்துள்ளார்.