அது பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கம்தான். ஆனால், பல்வேறு கருத்துக்களுக்கு இடமளிக்கும் அரங்கமாக அது இல்லை. கருத்தரங்கப் பேச்சாளர் ஒருவர் தம் கருத்தை மட்டுமே வலியுறுத்தும் ஒரு அரங்கமாகத்தான் அமைந்தது.
கடந்த மாதம் யுனிவர்சிடி உத்தாரா மலேசியா மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கின் காணொளியை இணையத்தில் பார்த்த பலரும் இந்த முடிவுக்குத்தான் வந்தார்கள்.
அந்த 24-நிமிட காணொளியில் கருத்தரங்கப் பேச்சாளர் ஷரிபா ஸொக்ரா ஜபின் சைட் ஷா மிஸ்கினுக்கும் மாணவி கே.எஸ்.பவானிக்குமிடையில் காரசாரமான விவாதம் நடக்கிறது.
அது அப்படியே இணையத்தில் பதிவேற்றப்பட்டு முகநூலிலும் இணையப் பக்கங்களிலும் அதன்மீது அனல்பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
கருத்தரங்கின் பார்வையாளர்களில் ஒருவரான பவானி, கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் கூட்டமைப்பான பெர்சே பற்றியும் அதன் தலைவர்கள் எஸ்.அம்பிகா, ஏ.சமட் சைட் ஆகியோர் பற்றியும் தப்பான கருத்தைப் பரப்ப முயல்கிறார்கள் என்று கூறிக் கண்டித்தார்.
ஒரு சில நாடுகளால் பல்கலைக்கழகம்வரை இலவச கல்வி வழங்க முடிகிறபோது மலேசியாவால் ஏன் அதைச் செய்ய முடியாது என்றவர் வினவ, கூட்டத்தினர் அதைக் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
‘நான் சொல்வதைக் கேளுங்கள்’
பவானி பேசிக்கொண்டிருந்தபோது ஷரிபா, மேடையை விட்டிறங்கி அவர் முன்னே வந்து நின்றார்.
பவானி பேசுவதை இடைமறித்து “நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று பத்து தடவையாக சொல்லியிருப்பார். பிறகு ஒலிவாங்கியைப் பிடுங்கினார். அதன்பின்னர் திட்டத் தொடங்கினார்.
“முதலாவதாக, இது எங்கள் நிகழ்ச்சி. நாங்கள் பேசுவதற்கு இடமளிக்க வேண்டும். இரண்டாவதாக, நான் பேசும்போது நீங்கள் கேட்க வேண்டும்”, என்று ஷரிபா ஸொக்ரா கூறினார்.
தம் பேச்சு இடைமறிக்கப்பட்டதற்கு பவானி எதிர்ப்புத் தெரிவித்துப் பார்த்தார். எடுபடவில்லை.
“நான் பேசுவதைக் கேளுங்கள்”, என்றார் ஷரிபா ஸொக்ரா.. அம்பிகாவை “ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விடுபவர்” என்றார். இலவசக் கல்விக்காகக் குரல் கொடுக்கும் பவானியையும் அவர் கேலி செய்தார்.
“மலேசியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட வேண்டாம். நீங்கள் மலேசியாவுக்காக என்ன செய்தீர்கள்? என்ன செய்கிறீர்கள்?
“கியூபாவுக்குச் செல்லுங்கள், அர்ஜெண்டினாவுக்குச் செல்லுங்கள், லிபியாவுக்குச் செல்லுங்கள் மற்ற இடங்களுக்கும் சென்று பாருங்கள். இங்கு கூடியுள்ள மாணவர்கள் அரசாங்கம் செய்வதில் திருப்தி கொண்டுதானே இருக்கிறார்கள்”, என்று ஷரிபா ஸொக்ரா சொல்லியதும் கூட்டத்தினர் கரவொலி எழுப்பினர்.
மாணவர்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்ற அவர் விலங்குகளுக்கும் பிரச்னைகள் உண்டு என்றார்.
“சுறாமீன்களுக்கும் பிரச்னைகள் உண்டு. மக்கள் மட்டும்தான் குறை, குறை என்று குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
“சுறாமீன் துடுப்பு (shark fin) சாப்பிட்டு இருக்கிறீர்களா? சுறாமீனைப் பிடித்துக் கொன்று துடுப்பை எடுத்துக்கொண்டு மீனைக் கடலில் வீசி எறிவார்கள்.”
மனிதர்கள் கொடியவர்கள் என்பதைக் காண்பிக்க பறவைகள், மற்ற விலங்குகளையும் அவர் எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார்.
ஏழு நிமிடங்கள் அவரது வசைமாறியைக் கேட்டுக்கொண்டிருந்த பவானி அதன்பின்னர் அங்கிருந்து வெளிநடப்புச் செய்தார்.
மூளையைச் சலவை செய்யும் கூட்டம்
முகநூலில் தேடிப்பார்த்ததில் ஷரிபா ஸொக்ரா,Suara Wanita 1Malaysia-SW1M- (1மலேசியா மகளிர் குரல்) என்னும் அமைப்பின் தலைவர் என்பது தெரிய வந்தது.
‘பல்கலைக்கழக மாணவர்களும் அரசியலும்’ என்ற தலைப்பைக் கொண்ட அக்கருத்தரங்கம் டிசம்பர் 8-இல் நடந்தது. ஆனால், குறிப்பிட்ட இந்தக் காணொளி கடந்த புதன்கிழமைதான் யுடியூப்பில் பதிவேற்றப்பட்டிருந்தது.
பதிவேற்றப்பட்டு ஆறு நாளே ஆகும் அக்காணொளியை இன்றுகாலை வரை பார்த்தவர் எண்ணிக்கை 170,000 ஆகும். பார்தவர்களில் பலர் “அதிருப்தி” தெரிவித்தனர்.
நேற்று பவானியைத் தொடர்புகொண்டு பேசியபோது கருத்தரங்கப் பேச்சாளர்கள் அம்பிகாவையும் பக்காத்தான் தலைவர்களையும் கேவலமாக பேசினார்கள் அதனால் தாம் எதிர்த்துப் பேசியதாகக் கூறினார்.
பெர்சே பேரணிகள் தீயவை என்று சித்தரிக்கும் வீடியோ படமும் அக்கூட்டத்தில் திரையிடப்பட்டதாக அவர் சொன்னார்.
“அது முழுக்க மூளையைச் சலவை செய்யும் நிகழ்வாகத்தான் இருந்தது”, என்று இரண்டாம் ஆண்டு சட்ட மாணவியான பவானி கூறினார். ஷரிபா ஸொக்ரா குழுவினர் மற்ற பல்கலைக்கழகங்களிலும் இதேபோன்ற கருத்தரங்குகளை நடத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.