மாட் சாபு ‘அல்லாஹ்’ சொல் மீதான தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்

sabuபாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கட்சியின் Syura மன்றம் எடுத்த முடிவுக்கு ஆதரவளித்து ‘அல்லாஹ்’ சொல் மீதான தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.

கோத்தா பாருவில் நேற்றிரவு பாஸ் தேர்தல் மய்யம் ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

அந்த புனிதமான வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை பிரதிபலிக்காது என்பதால் தங்கள் சமய நூல்களில் மொழிபெயர்க்கப்பட்ட சொல்லாக முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக் கூடாது என Syura மன்றம் எடுத்த முடிவுக்குத் தாம் கட்டுப்படுவதாக அவர் சொன்னார்.

“என் நிலை Syura மன்றம் எடுத்த முடிவுக்கு இணையானது,” என அவர் புன்னகையுடன் கூறினார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் தங்கள் சமய நூல்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது தடை செய்யப்படவில்லை என 2010ம் ஆண்டு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறிக்கை விடுத்துள்ளதாகக் கூறி முஸ்லிம் அல்லாதார் அந்த சொல்லைப் பயன்படுத்தலாம் என மாட் சாபு என்றும் அழைக்கப்படும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் , கிறிஸ்துவர்கள் பைபிள் பாஹாசா மலேசியா பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்ட பின்னர் அந்த சொல் மீது மீண்டும் சர்ச்சை மூண்டது.

பைபிளில் அல்லாஹ் சொல் பயன்படுத்தப்படலாம் என ஏற்கனவே ஒப்புக் கொண்ட கிளந்தான் மந்திரி புசாரும் பாஸ் ஆன்மீகத் தலைவருமான நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், முஸ்லிம் அல்லாதார் ஏன் அந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என விளக்கமளித்து விட்டு தனது நிலையையும் மாற்றிக் கொண்டு விட்டார்.

பெர்னாமா