கோலாலம்பூரில் ஜனவரி 17ம் தேதி நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வட்ட மேசை விவாதத்தில் பங்கு கொள்ள வருமாறு பிகேஆர் விடுத்த அழைப்பை ஜிஎப்ஐ எனப்படும் உலக நிதி நேர்மைக் கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
மலேசியாகினிக்கு மின் அஞ்சல் வழி அந்தத் தகவலை ஜிஎப்ஐ-யின் தொடர்புப் பிரிவு இயக்குநர் கிளார்க் காஸ்கோய்ன் தெரிவித்தார். பிகேஆர் அழைப்பை நிராகரித்ததற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
“நாங்கள் பாங்க் நெகாராவுடன் தொடர்பு கொண்டு மலேசியாவிலிருந்து சட்ட விரோதமாக பணம் வெளியே கொண்டு செல்லப்படுவதைத் தடுப்பதற்கு உதவி செய்ய முன் வருவதாகத் தெரிவித்துள்ளோம்.”
“நாங்கள் அதன் பதிலுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார் அவர்.
2010ம் ஆண்டு மலேசியாவிலிருந்து 196.8 பில்லியன் ரிங்கிட் கள்ளத்தனமாக வெளியேறியுள்ளதாக ஏற்கனவே ஜிஎப்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அளவு சட்ட விரோதமாக பணம் வெளியேறும் நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் சீனாவுக்கு அடுத்த நிலையில் மலேசியாவை வைத்துள்ளது.
இனிமேல் பாங்க் நெகாராவைப் பொறுத்தது
அந்த விவகாரத்தை புலனாய்வு செய்வதாக 2011ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பாங்க் நெகாராவும் நிதி அமைச்சும் உறுதி கூறி வருகின்றன. ஆனால் ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
பாங்க் நெகாரா அதிகாரிகள் பங்கு கொண்டால் மட்டுமே தனது பேராளர்கள் விவாதத்தில் கலந்து கொள்வர் என ஜிஎப்ஐ தெரிவித்துள்ளதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறினார்.
“நாங்கள் பாங்க் நெகாரா கடிதம் எழுதுவதில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் பாங்க் நெகாராவும் நிதி அமைச்சும் பங்கு கொண்டால் மட்டுமே தான் கலந்து கொள்ள முடியும் என ஜிஎப்ஐ முடிவு செய்து விட்டது,” என்றார் ராபிஸி.
மலேசியாவில் ஜிஎப்ஐ வருகை அளிப்பதற்கு பிகேஆர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும் அவர் சொன்னார். அடுத்த நடவடிக்கை எடுப்பது பாங்க் நெகாராவைப் பொறுத்தது என்றும் ராபிஸி சொன்னார்.
“பாங்க் நெகாராவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக ஜிஎப்ஐ சொல்கிறது. பாங்க் நெகாரா அதனை ஏற்றுக் கொள்ளும் என நாங்கள் நம்புகிரோம்.”