Suara Wanita 1Malaysia (SW1M) எனப்படும் அமைப்பு ஒன்றின் தலைவி ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் -உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திட்டு வாங்கிய Universiti Utara Malaysia (UUM) சட்டக் கல்வி மாணவி கேஎஸ் பவானிக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. அதே வேளையில் ஷாரிபாவை எல்லாத் தரப்புக்களும் கண்டித்து வருகின்றன.
கடந்த மாதம் UUM கருத்தரங்கு ஒன்றில் பவானியை ஷாரிபா திட்டும் 24 நிமிட காணொளி யூ டியூப் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டதும் அது வெகு வேகமாக பரவியது. இணையக் குடிமக்கள் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர். பல நகைச் சுவைகளும் ஷாரிபாவை கிண்டல் செய்யும் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பவானி பிஎஸ்எம் தொடர்புடைய அரசு சாரா அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் பிஎன் கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஷாரிபாவிடமிருந்து ஆளும் கூட்டணியை விலக்கி வைக்கும் செய்தியை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் டிவிட்டரில் அனுப்பியுள்ளார்.
பவானியை உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா தற்காத்துப் பேசியுள்ளார். அந்த மாணவியிடம் ஷாரிபா கீழ்த்தரமாகப் பேசியிருக்கக் கூடாது என அவர் சொன்னார்.
ஷாரிபா பவானியை திட்டிய போது 11 முறை பயன்படுத்திய “listen, listen, listen…” என்ற சொற்றொடர் எழுதப்பட்ட டி சட்டைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூட இணைய பயனாளிகள் யோசனை றியுள்ளனர்.
மலேசியப் பல்கலைக்கழகங்களின் பரிதாபகரமான நிலையே அத்தகைய சம்பவங்கள் நிகழ்வதற்குக் காரணம் எனச் சிலர் குற்றம் சாட்டினர். முன்னள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனில் அபிடின் அவர்களில் ஒருவர் ஆவார். அவரும் தமது கருத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
“அந்த “listen, listen, listen…” (சம்பவம்), அறிவாற்றல் சுதந்திரத்தின் நன்மைக்காக சூழ்நிலை உடனடியாக மாற வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.”
மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் அரசாங்க ஆதரவு மாணவர் அமைப்பான Aspirasi கூட ஷாரிபாவைக் கண்டித்தது. மரியாதை பற்றிப் பேசும் அவர் மற்றவர்களை அவமானப்படுத்தக் கூடாது என்பதை மறந்து விட்டதாக அது கூறியது.
“மாணவர்களுடைய கண்களைத் திறக்க வேண்டும் என அவர் விரும்பினால் அவர் தமது சொந்தக் கண்களை திறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எங்களை மதிக்க வேண்டும்,” என அதன் தலைவர் இஸ்ஹாம் இஸ்மாயில் கூறினார்.
“பூனைகள், சுறா மீன்கள், மாடுகள் போன்ற விலங்குகள் பேச முடியுமானால் அது போன்று நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறு அவரைக் கேட்டுக் கொள்ளும்,” என அவர், விலங்குகளுக்குக் கூட பிரச்னைகள் இருப்பதால் மக்கள் புகார் செய்யக் கூடாது என ஷாரிபா கூறியது பற்றிக் குறிப்பிட்டார்.
அந்தச் சம்பவத்திலிருந்து அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ஹாம் எச்சரித்தார்.
“ஷாரிபாவை மட்டும் குறை சொல்ல வேண்டாம். நம் அனைவரிடமும் பலவீனங்கள் இருக்கலாம். அவற்றை நாம் ஆய்வு செய்ய வேண்டும். ஷாரிபா நமது உண்மையான எதிரி அல்ல. நம்மிடையே மரியாதை உணர்வும் நியாய சிந்தனையும் குறைந்து வருவதே அதற்குக் காரணமாகும்.”
‘அகங்காரமான தாக்குதல்’
அந்தச் சம்பவத்தை ‘பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள அகங்காரமான தாக்குதல்’ என மஇகா இளைஞர் பிரிவு வருணித்துள்ளது.
“ஷாரிபாவின் நெறியற்ற முறைகேடான நடவடிக்கைகளினால் அவர் கருத்தரங்குப் பேச்சாளாராக இருப்பதற்கு தகுதியற்றவர்,” என அதன் செயலாளர் சி சிவராஜா கூறினார்.
“முதலாவதாக பவானி எழுப்பிய கேள்விகளுக்கு ஷாரிபா பதில் சொல்லியிருக்க வேண்டும். தேவையில்லாமல் அவரைத் திட்டக் கூடாது. ஷாரிபா மனித உரிமைகள் பற்றிப் பேசலாம். ஆனால் மாணவியின் உரிமைகளை அவர் ஏன் மறந்து விட்டார் என்பதே பெரிய கேள்வி ஆகும்.”
“தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு மாணவர்களுக்கு உரிமை இருப்பதை ஷாரிபாவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். காரணம் அவர்களும் மனிதர்களே. அந்தக் கருத்தரங்கில் அவர் குறிப்பிட்ட விலங்குகளைப் போன்று அல்ல.”
பவானிக்குப் பேச்சுச் சுதந்திரம் இருப்பதை மிபாஸ் மலேசிய இந்தியர் முன்னேற்ற சங்கம் சுட்டிக் காட்டியது. அதனால் பவானி தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு ஷாரிபா அனுமதித்திருக்க வேண்டும் என அதன் தலைமைச் செயலாளர் எஸ் பாரதிதாசன் சொன்னார்.
“நாட்டை விட்டு வெளியேறுமாறு அவர் பவானியைக் கேட்டுக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. அரசாங்க நிர்வாகத்தில் காணப்படுகின்ற பலவீனத்தைப் பற்றிய விவாதத்தையே ஷாரிபா தவிர்த்துள்ளார்,” என அவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பவானியின் துணிச்சலை பாஸ் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் ராஜா அகமட் இஸ்காண்டார் ராஜா யாக்கோப் பாராட்டியுள்ளார். எதிர்காலத்தில் தலைவர்களாக விரும்பும் எல்லா மாணவர்களும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
“அதே நேரத்தில் குறை சொல்லப்படுவதை கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள் விரும்பாதது எங்களூக்கு வருத்தத்தை அளித்துள்ளது. ஒரு பேச்சாளர் தாம் பேசுவதை மட்டுமே விரும்பி மற்றவர்கள் சொல்வதைச் செவிமடுக்க விரும்பவில்லை என்றால் அது அவருடைய ஆணவத்தைக் காட்டுகின்றது. அது நம் அனைவருக்கும் அவமானமாகும்.”
Kami எனப்படும் சுயேச்சை மாணவர் அமைப்பும் அந்த விஷயம் பற்றி ஒர் அறிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான அமைப்புக்கள் தெரிவித்த கருத்தை பகிர்ந்து கொண்ட அதன் தலைவர் காலித் இஸ்மாத், ஷாரிபா பவானியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.