தேர்தல் ஆணையம் (இசி), சாபா குடியேற்றக்காரர்கள்மீது அரச விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணை முடிவடைவதற்குமுன் அது குறித்து கருத்துத் தெரிவிக்காது.
அவ்வாறு கருத்துரைப்பது ஆர்சிஐ விசாரணையை அவமதிப்பாகும் என்று தமக்குச் சட்ட ஆலோசனை கூறப்பட்டிருப்பதாக இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார்.
“பிப்ரவரியில் இசி விசாரணைக்கு அழைக்கப்படும்.இப்போது (விசாரணை நடந்துகொண்டிருப்பதால்) அது பற்றிக் கருத்துரைப்பது அதை அவமதிப்பதாக அமையும்.
“ஆர்சிஐ அதன் விசாரணையை முடிக்கட்டும். அதன்பின் கருத்துரைப்பதே முறையாகும்”, என்று அப்துல் அசீஸ் நேற்று தொடர்புகொண்டபோது தெரிவித்தார்.
ஆர்சிஐயிடம் கிட்டத்தட்ட 200 சாட்சிகள் சாட்சியமளிப்பர் என்றும் அவர் சொன்னார்.
இசி இப்போதும் வாக்காளர்களைப் பதிவு செய்து வருகிறது என்று குறிப்பிட்ட அப்துல் அசீஸ், ஆனால் 20 ஆண்டுகளுக்குமுன் நடந்ததாகக் கூறப்படுவதுபோல் அல்லாமல் இப்போது முறைப்படி பதிவு செய்கிறது என்றார்.
ஆர்சிஐ விசாரணை நான்காவது நாளாக நடந்து வருகிறது. இதுவரை அதில் சாட்சியமளித்த சாபா தேசிய பதிவுத் துறை உயர் அதிகாரிகள், 1990-களில் குடியேற்றக்காரர்கள் வாக்களிப்பதற்கு வசதி செய்து கொடுக்கும்படி தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
அந்நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் அதிகாரிகள், தகுதி இல்லாத குடியேற்றக்காரர்களுக்கு, அவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதற்காக அடையாள அட்டைகளுக்கான ரசீதுகள், நீல நிற அடையாள அட்டைகள் போன்றவற்றை வழங்கியதாகத் தெரிவித்தனர்.