Ops Durian Burukல் காலஞ்சென்ற மெகாட் ஜுனிட் மெகாட் அயூப்-பும் அப்துல் அஜிஸ் சம்சுதீனும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் நேற்று தெரிவிக்கப்பட்ட விஷயங்களைக் கொண்டு போலீசார் புலனாய்வைத் தொடங்க முடியும்.
இவ்வாறு கோலாலம்பூர் முன்னாள் குற்றப்புலனாய்வுத் துறைத் (சிஐடி) தலைவர் மாட் ஜைன் மாட் இப்ராஹிம் கூறுகிறார்.
“போலீசார் தங்கள் புலனாய்வுகளைத் தொடங்குவதற்கு ஆர்சிஐ விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார் அவர். போலீசார் இப்போதே தங்கள் புலனாய்வை ஆரம்பிக்கலாம்.”
ஆர்சிஐ-ல் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் பெரிய தேசத் தூரோகமாகும் என வருணித்த மாட் ஜைன், தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) உடனடியாக புலனாய்வைத் தொடங்க வேண்டும் என்றார்.
“முன்னாள் சபா தேசியப் பதிவுத் துறை இயக்குநர் ராம்லி கமாருதின், முன்னாள் தாம்பாருலி தேசியப் பதிவுத் துறைத் தலைவர் யாக்கோப் டாம்ஷா ஆகியோர் அப்போது டாக்டர் மகாதீர் முகமட்டின் வலது கரங்கள் எனக் கருதப்பட்ட காலஞ்சென்ற மெகாட் ஜுனிட் மீதும் அப்துல் அஜிஸ் மீதும் பழி போட்டுள்ளதும் அத்துடன் 1992-1995 வரை மேற்கொள்ளப்பட்ட Ops Durian Buruk பற்றி முகமட் நாசிர் சுஹிப் வெளியிட்டுள்ள தகவலும் போலீசார் முழு அளவில் புலனாய்வைத் தொடங்குவதற்குப் போதுமானவை.”
“போலீசார் ஆர்சிஐ முடிவடையும் வரைக்குமோ அல்லது ஆர்சிஐ அறிக்கை தயாராகும் வரைக்குமோ காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. போலீசார் அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு யாராவது போலீசில் புகார் செய்வதற்காக பொறுத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. போலீசார் சுயமாகவே செயல்படத் தொடங்க முடியும், தொடங்க வேண்டும். ஆர்சிஐ-யில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் ஜீரணிக்க முடியாத அளவுக்கு மிகவும் கடுமையானவை.”
“அவை மோசடிகள், பெரிய அளவிலான தேசத் துரோகம். அதனால் தேசியப் பாதுகாப்புக்கும் நமது இறையாண்மைக்கும் மருட்டல் ஏற்பட்டுள்ளது,” என்றும் மாட் ஜைன் சொன்னார்.
ஈராயிரத்தாவது ஆண்டு ஜுன் மாதம் முன்னாள் பொருளாதார திட்டப் பிரிவு தலைமை இயக்குநர் அலி அபுல் ஹசான் மீதான விசாரணையை மூடியதின் மூலம் அப்போதைய பிரதமர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று முன்னாள் ஊழல் தடுப்பு நிறுவன இயக்குநர் ஷாபீ யாஹ்யா சிவில் வழக்கு ஒன்றில் சாட்சியமளித்ததைத் தொடர்ந்து அன்வார் இப்ராஹிம் புகார் செய்ததும் கோலாலம்பூர் சிஐடி பிரிவுக்குத் தலைவராக இருந்த தாம் போலீஸ் விசாரணையைத் தொடங்கியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
“அந்த வழக்கு முடிவடையும் வரையில் அல்லது நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரையில் காத்திருக்காமல் அந்த நேரத்தில் போலீஸ் புலனாய்வு தொடங்கியதை வலியுறுத்துவதே இங்கு எனது நோக்கமாகும்,” என்றும் மாட் ஜைன் சொன்னார்.