இப்போது ‘Kak Listen’ என அழைக்கப்படும் ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் University Utara Malaysia (UUM) சட்டக் கல்வி மாணவி கேஎஸ் பவானியை திட்டுவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் அண்மையில் வேகமாகப் பரவியது.
அந்த விவகாரம் மீது தாம் விரைவில் பதில் அளிக்கப் போவதாக ஷாரிபா சினார் ஹரியான் என்ற மலாய் நாளேட்டிடம் கூறியுள்ளார்.
தாம் அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடப் போவதாகத் தெரிவித்த அவர் எப்போது எங்கு அது வெளியிடப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை.
“இறைவன் கருணை இருந்தால் நான் குறுகிய காலத்தில் தகவல் கொடுப்பேன்,” என அவர் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.
“பல்கலைக்கழக மாணவர்கள் நடப்பு அரசியலை அறிந்துள்ளனரா ?” என்னும் தலைப்பைக் கொண்ட அந்தக் கருத்தரங்கை UUM-ன் தங்கும் விடுதிகள் குழுவும் ஷாரிபா தலைமை தாங்கும் Suara Wanita 1Malaysia (SW1M) என்ற அரசு சாரா அமைப்பும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் தேதி அந்தக் கருத்தரங்கு UUMல் நடைபெற்றது.
மொத்தம் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
ஷாரிபா ஜொஹ்ராவுடன் பவானி துணிச்சலுடன் வாதம் செய்வதையும் ஷாரிபா அவரைத் திட்டுவதையும் காட்டும் 24 நிமிட வீடியோ, யூ டியூப் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டு வெகு வேகமாக பரவியதும் இணையக் குடிமக்கள் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர். பல நகைச் சுவைகளும் ஷாரிபாவை கிண்டல் செய்யும் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
எட்டு நாட்களுக்கு முன்பு இணையத்தில் சேர்க்கப்பட்ட அந்த வீடியோவை இன்று காலை வரையில் மொத்தம் 665,000 பேர் பார்த்துள்ளனர்.
அம்பிகா: அது தான் பேச்சுச் சுதந்திரம்
இன்னொரு நிலவரத்தில் பிரபலமில்லாத அந்த Suara Wanita 1Malaysia (SW1M) அமைப்பின் திட்ட நிர்வாகி எனக் கூறப்பட்ட அஸ்ஹார் என்பவருடன் மலேசியாகினி நேற்று தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டது. அந்த விவகாரம் பற்றிக் கருத்துரைக்க மறுத்து விட்ட அவர், விரைவில் நிருபர்கள் சந்திப்புக்கு அந்த அரசு சாரா அமைப்பு ஏற்பாடு செய்யும் என்றார்.
ஷாரிபாவிடமிருந்து அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் உட்பட அம்னோ தலைவர்கள் ஒதுங்கியுள்ள போதிலும் அவர் அம்னோ வட்டாரங்களில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அவர் கிம்மா எனப்படும் மலேசிய இந்தியர் முஸ்லிம் காங்கிரஸில் முன்பு மகளிர் பிரிவுத் துணைத் தலைவியாக ஷாரிபா ஜொஹ்ரா இருந்துள்ளதை அந்தக் கட்சியின் தலைமையகம் தொடர்பு கொள்ளப்பட்ட போது உறுதிப்படுத்தியது. கிம்மா அம்னோவில் ஒர் இணைக் கட்சியாகும்.
இதனிடையே அந்த Suara Wanita 1Malaysia (SW1M) தலைவியை குறை கூறும் போது எல்லை மீறிச் செல்ல வேண்டாம் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அம்பிகாவை “pencetus anarki di Malaysia (மலேசியாவில் குழப்பத்தை தூண்டுகின்றவர்) என ஷாரிபா பவானியுடன் நடத்திய வாக்குவாதத்தின் போது வருணித்திருந்தார்.
“நாம் குறை சொல்வது எல்லை மீறக் கூடாது என நான் கருதுகிறேன். சில குறை கூறல்கள் தேவையற்றவை, செக்ஸ் ரீதியிலானவை. போதுமான அளவுக்குச் சொல்லப்பட்டு விட்டது. இது ஒரு படிப்பினை என நான் நம்புகிறேன்,” என அம்பிகா சொன்னதாக சன் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
குழப்பவாதி என வருணிக்கப்பட்டது பற்றிக் குறிப்பிட்ட அவர், தாம் விரும்புவதைச் சொல்வதற்கு ஷாரிபாவுக்குச் சுதந்திரம் உண்டு என்றார்.
“அது தான் பேச்சுச் சுதந்திரம். சொல்லப்பட்டது அவமானமானது. அதற்கு பொது மக்கள் தெரிவித்த எதிர்ப்பு மகத்தானது.”