அஸ்மின்: சாபா ஆர்சிஐ சாட்சியங்கள் டாக்டர் எம் ஒரு துரோகி என்பதை நிரூபிக்கின்றன

1azminசாபா குடியேற்றக்காரர்கள்மீதான அரச விசாரணை ஆணையத்தில் ‘வாக்குகளுக்காக- குடியுரிமை’ திட்டம் ஒன்று இருந்ததாகக் கூறப்பட்டிருப்பது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஒரு தேச துரோகி என்பதைக் காண்பிக்கிறது என்று பிகேஆர் கூறியுள்ளது.

“விசாரணையையும் சாட்சிகளின் சாட்சியங்களையும் அணுக்கமாகக் கவனித்து வருகிறோம். அதிர்ச்சிதரும் விசயங்கள் வெளியாகியுள்ளன, பல பெயர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன ஆனால், எங்களுக்கு அவை வியப்பளிக்கவில்லை”, என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார்.

1drm“அது அப்போதைய பிரதமர்(இடம்) தலைமையில் திட்டமிட்டு நடந்த முயற்சி என்பதை நாங்கள் உணர்கிறோம். என்னப் பொருத்தவரை அம்னோவின் அரசியல் வலிமையைப் பெருக்கிக்கொள்ள அந்நியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிய அவர் ஒரு துரோகி”. இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அஸ்மின் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அரசுத் துறைகள் அத்தனையும் பிரதமர் துறையின்கீழ் செயல்படுபவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று கோத்தா கினாபாலுவில், ஆர்சிஐ-இடம் சாட்சியமளித்த முன்னாள் சாபா தேசிய பதிவுத் துறை உயர் அதிகாரிகள், 1990-களில் குடியேற்றக்காரர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும்படி தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறினர்.

அந்நடவடிக்கையில் தகுதி இல்லாத குடியேற்றக்காரர்களுக்கு, அவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதற்காக அடையாள அட்டைகளுக்கான ரசீதுகள், நீல நிற அடையாள அட்டைகள் போன்றவற்றை வழங்குவது போன்றவை உள்ளிட்டிருந்தன.

இது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டதற்கு இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், கருத்துரைப்பதற்குமுன் ஆர்சிஐ-இல் என்ன தெரிவிக்கப்பட்டது என்பதைத் தம் அதிகாரிகளிடம் கேட்டறிய வேண்டியிருப்பதாகக் கூறினார்.