பிலிப்பினோ அகதி ஒருவர், தாமும் தம்மைப் போன்ற மற்றவர்களும் எந்த முயற்சியுமின்றியே மலேசிய குடிமக்கள் ஆனதாக சாபா குடியேற்றக்காரர்கள்மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று கூறினர்.
இஸ்மாயில் பலாகா, தாம் குடியிருந்த கினாருட் பகுதிக்கு ஒரு மர்ம கும்பல் வந்து தங்களைப் பற்றிய விவரங்களை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். அது எப்போது நடந்தது என்பதை அவரால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
“அடையாளம் இல்லா ஊர்தி ஒன்றில் அந்தக் கும்பல் வந்தது. எங்கள் எல்லோரையும் கிராமத்து மண்டபத்துக்குக் கொண்டு சென்றார்கள்.அது பகல் நேரம். ஆனால், தேதி, ஆண்டு நினைவில் இல்லை.
“பாரங்களைக் கொடுத்து பூர்த்தி செய்யச் சொன்னார்கள். எங்கள் கைரேகைகள், படங்கள் முதலியவற்றை எடுத்துக்கொண்டார்கள். அப்போது அது ஏன் என்பது எனக்குத் தெரியாது. நண்பர் ஒருவர் அடையாள அட்டைக்காக அப்படிச் செய்யப்படுவதாகக் கூறினார்”, என்றார்.
அடையாள அட்டையைப் பெறுவதற்குமுன், முதலமைச்சர் அலுவலகத்தின் குடியிருப்புப் ;பிரிவு வழங்கிய குடியிருப்பு அட்டையை வைத்திருந்ததாக அவர் சொன்னார்.
தாம் நீலநிற அடையாள அட்டையைப் பெறுவதற்குமுன் (அகதிகளுக்கான அனுமதிச் சீட்டான) ஐஎம்எம் 13, (தற்காலிக வசிப்பிடத் தகுதிக்கான) பச்சை அடையாள அட்டை அல்லது (நிரந்தர வசிப்பிடத் தகுதிக்கான) சிவப்புநிற அடையாள அட்டை போன்ற எதையும் வைத்திருந்ததில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஆக, அகதியாக வந்தது அவர் மலேசிய குடியுரிமை பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
இஸ்மாயில், 1975-இல், பிலிப்பின்சின் பூலாவ் உபியானில் உள்நாட்டுக் கலவரம் மூண்ட வேளையில் அங்கிருந்து மீன்பிடி படகு ஒன்றில் மலேசியாவுக்குத் தப்பி வந்தார்.