பிப்ரவரி 2-இல், டாட்டாரான் மெர்டேகாவில் நடைபெறும் பொங்கல் ஒற்றுமை விழாவில் 50,000-த்துக்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன் கூறினார்.
அந்நிகழ்வு மாலை 6மணிக்குத் தொடங்கி இரவு மணி 8.30 வரை நடைபெறும் என்றவர் தெரிவித்தார்.
அவ்விழாவில்,பல்வேறு பாரம்பரிய கலைகள் இடம்பெறும் என்றும் இந்தியக் கலைஞர்களும் மலேசியக் கலைஞர்களும் அவற்றைப் படைப்பார்கள் என்றும் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு துணை அமைச்சருமான சரவணன் கூறினார்.
“அவ்விழா நாம் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்”. நேற்று கோலாலும்பூரில் அவ்விழாவையொட்டி சிறப்புப் பாடலொன்றை வெளியிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்பாடலை சீனி நைனா முகம்மது வரைந்துள்ளார். இசை அமைத்தவர் ஆர்.பி.எஸ்.ராஜு.
மஇகா, கூட்டரசுப் பிரதேச இந்தியர் மேம்பாட்டு அறநிறுவனத்துடன் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள அவ்விழா இரவு மணி 8.30 தொடங்கி அஸ்ட்ரோ ஒளிஅலை 201-வழி இரண்டு மணி நேரத்துக்கு ஒளிபரப்பப்படும்.
விழாவின் இறுதியில் பல்வேறு இந்திய சமூகங்களையும் பிரதிபலிக்கும் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பும் வாண வேடிக்கைகளும் இடம்பெறும் என்று சரவணன் கூறினார்.